பீர்பூம் செல்லும் மம்தா: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

பீர்பூம் செல்லும் மம்தா: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

8 பேரின் உயிரைப் பலிகொண்ட தீவைப்புச் சம்பவம் நடைபெற்ற பீர்பூம் மாவட்டத்துக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று செல்கிறார்.

திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் பாது ஷேக், சில நாட்களுக்கு முன்னர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் பீர்பூம் மாவட்டத்தின் ராம்பூர் ஹாட் பகுதியில் உள்ள பொக்துய் கிராமத்தில வீடுகளுக்குச் சிலர் தீவைத்தனர். இச்சம்பவத்தில், 2 குழந்தைகள் 3 பெண்கள் என 8 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் பாஜக, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திவருகிறது. இதே கோரிக்கையை காங்கிரஸும் முன்வைத்திருக்கிறது.

இரண்டு தரப்பினருக்கு இடையிலான மோதல்தான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்றும், அரசியல் காரணி எதுவும் இல்லை என்றும் மேற்கு வங்க காவல் துறையினர் விளக்கமளித்தனர். எனினும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டனர் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன. அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் இப்படி ஒரு சம்பவம் எப்படி நிகழ்ந்தது எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, 20 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையிலான அரசியல் மோதலாக இந்த விவகாரம் உருவெடுத்திருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் ஜக்தீப் தன்கரும் இச்சம்பவத்தைக் கண்டித்திருந்தார். ஜனநாயகத்துக்கும், மனிதாபிமானத்துக்கும் இச்சம்பவம் ஓர் அவமானம் என்று கூறிய அவர், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதிய கடிதத்தில், குற்றவாளிகளைப் பாதுகாக்க மாநில அரசு முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவம் துரதிருஷ்டவசமானது எனக் கூறியிருந்த மம்தா, இந்தச் சம்பவத்தை வைத்துத் தனது அரசு மீது அவதூறு பரப்புவதாக பாஜக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டியிருக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் நடந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, இச்சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, இச்சம்பவத்துக்குக் காரணமானவர்களை மன்னிக்கவே கூடாது என பலியானோரின் குடும்பத்தினரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்தச் சூழலில், சம்பவம் நடைபெற்ற பீர்பூம் மாவட்டத்துக்கு மம்தா செல்வதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in