'பழங்குடியினரை வேட்பாளராக்குவோம் என பாஜக முன்பே சொல்லியிருந்தால்...' - திடீர் பல்டியடிக்கும் மம்தா!

'பழங்குடியினரை வேட்பாளராக்குவோம் என பாஜக முன்பே சொல்லியிருந்தால்...' - திடீர் பல்டியடிக்கும் மம்தா!

குடியரசுத் தலைவர் பதவிக்கு பழங்குடியினரை முன்னிறுத்துவோம் என்று பாஜக முன்பே கூறியிருந்தால், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து விவாதித்திருக்கலாம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் உட்பட 17 கட்சிகளை ஒருங்கிணைத்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை ஜனாதிபதி வேட்பாளராகவும் களம் இறங்கியுள்ளார்.

இத்தகைய சூழலில் திடீரென மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை குறைத்துள்ளார். இது ஏன் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்து வந்தது.

கொல்கத்தாவின் இஸ்கான் கோவிலில் ரத யாத்திரையைத் தொடங்கிவைத்த பிறகு இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய மம்தா பானர்ஜி, "பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. பழங்குடியினரை குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைப்போம் என்று பாஜக முன்பே கூறியிருந்தால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து விவாதித்திருக்கலாம். ஆனால் அவர்கள் எங்களுடைய ஆலோசனைகளைக் கேட்க மட்டுமே அழைத்தார்கள்.

மக்கள் நலன் கருதி பொதுவான ஜனாதிபதி வேட்பாளர் இருந்தால் நாட்டுக்கு நன்றாக இருந்திருக்கும். இதுபோன்ற ஒருமித்த கருத்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விஷயத்தில் நடந்தது. எங்கள் கூட்டணியில் 17 கட்சிகள் உள்ளன எனவே என்னால் ஒருதலைப்பட்சமாக பின்வாங்க முடியாது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திரௌபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்" என்று கூறினார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 49 சதவீத வாக்குகள் உள்ளது. அவர்களின் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ், அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதனால் முர்முவின் வெற்றி உறுதியாகிவிட்டது.

ஒடிசாவை சேர்ந்த திரௌபதி முர்மு ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ஆவார். இந்த தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் இந்தியாவின் ஜனாதிபதியாகும் முதல் பழங்குடிப் பெண் என்ற பெருமையை இவர் பெறுவார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in