பரபரப்பான அரசியல் சூழல்: பிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா பானர்ஜி

பரபரப்பான அரசியல் சூழல்: பிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

மம்தா தலைமையிலான மேற்குவங்க அரசு நீண்ட காலமாக கோரி வரும் ஜிஎஸ்டி வரிக்கான நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமலாக்கத் துறையால் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மேற்கு வங்க முன்னாள் அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜி சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில் நடைபெறும் இந்த சந்திப்பு பல ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மம்தா பானர்ஜி நான்கு நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். இன்று அவர் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளார். மேலும், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களையும் மம்தா பானர்ஜி சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மம்தா பானர்ஜி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறியதற்காக மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷை கைது செய்ய வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. வங்காளத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல்போக்கு நிலவி வரும் நிலையில் மோடியுடனான மம்தாவின் இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in