‘உங்கள் காலில் விழுந்து கெஞ்ச வேண்டுமா?’: மோடியை விளாசும் மம்தா

‘உங்கள் காலில் விழுந்து கெஞ்ச வேண்டுமா?’: மோடியை விளாசும் மம்தா

மேற்கு வங்கத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு முறையாக விடுவிக்காததை கண்டித்து மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி சீற்றம் காட்டியுள்ளார்.

’மேற்கு வங்கத்துக்கான நிதிகளை நிறுத்துவதாக அவர்கள் மிரட்டுகிறார்கள். பதிலுக்கு இங்கிருந்து வெளியேறும் ஜிஎஸ்டி வரி வசூலிப்பை நிறுத்தட்டுமா?’ என்பது மம்தா பானர்ஜியின் இன்றைய கொந்தளிப்புகளில் ஒன்று. ஜர்கிராமில் நடைபெற்ற பழங்குடியினர் மத்தியிலான கூட்டத்தில் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக மம்தா பானர்ஜி சீறினார்.

மத்திய அரசுடனான மேற்கு வங்க மாநிலத்தின் மோதல் புதிய வடிவமெடுத்து வருகிறது. இதன் அங்கமாக மாநில அரசின் செயல்பாடுகளை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் நிதிமூலத்தை மத்திய அரசு அடைத்துவிட்டதாக திரிணாமுல் காங்கிரஸார் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அவர்களின் எதிர்ப்புக் குரலும் சன்னமாகவே ஒலிக்கிறது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைகளின் அதிரடி ரெய்டுகள் காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ஆடிப்போயுள்ளதே இதற்கு காரணம்.

பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கு வங்கத்துக்கு சேர வேண்டிய நிதி ஒதுக்கீடான ரூ.18 ஆயிரம் கோடியை விடுவிக்கக்கோரி நீண்ட போராட்டம் நடத்தி வருகிறார் மம்தா. இதற்காக பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்தும் பலனில்லை. போதாக்குறையாக அண்மையில் மாநில அமைச்சர் அகில் கிரி ஜனாதிபதி திரௌபதி முர்முவை கண்ணியக் குறைவாக விமர்சித்தது புதிய தலைவலியாக, மம்தாவே மன்னிப்பு கேட்க வேண்டியதானது. இந்த அழுத்தம் எல்லாமுமாக இன்றைய ஜர்கிராம் கூட்டத்தில் மம்தாவை வெடிக்கச் செய்திருக்கிறது.

’மேற்கு வங்கத்துக்காக மத்திய அரசு விடுவிக்க வேண்டிய நிதியைக் கோரி பிரதமரை சந்தித்தும் பலனில்லை. இதற்கு மேலும் என்ன எதிர்பார்க்கிறார்கள்? காலில் விழுந்து யாசிக்கட்டுமா?’ என்று மம்தா உக்கிரம் காட்டியிருப்பது, மத்திய அரசுடனான திரிணாமுல் காங்கிரசின் உரசலை தீவிரப்படுத்தி இருக்கிறது.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான போக்கு கொண்டிருக்கும் மம்தா, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் அல்லாத கூட்டணியை கட்டமைக்க முயன்று வருகிறார். காங்கிரஸ் குறித்து அலட்டிக்கொள்ளாத பாஜக, மம்தாவின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மாநில முதல்வராக மம்தாவின் நெருக்கடிகளை அதிகரிப்பதன் மூலம், அவரது தேசிய அரசியல் முனைப்புகளை முடக்கவும் முயன்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in