‘பாஜகவுக்கு 400 தொகுதிகளில் வெற்றியா? 200 இடங்களில் ஜெயிப்பார்களா பார்ப்போம்’ சவால் விடும் மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

‘பாஜக 400 இடங்களில் வெற்றி பெறுவதெல்லாம் வாய்ப்பே இல்லை; அவர்களால் 200 இடங்களில் வெற்றி பெற முடிகிறதா என பார்ப்போம்’ என்று சவால் விடுத்துள்ளார் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி.

தலையில் ஏற்பட்ட காயத்தை அடுத்து சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் சுறுசுறுப்பு காட்டி வருகிறார் மம்தா பானர்ஜி. அந்த வகையில் மேற்குவங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியில் மீண்டும் களமிறங்கும் மஹூவா மொய்த்ராவை ஆதரித்து மம்தா பானர்ஜி அங்கே வாக்கு சேகரித்தார்.

மஹீவா  மொய்த்ரா உடன் மம்தா பானர்ஜி
மஹீவா மொய்த்ரா உடன் மம்தா பானர்ஜி

அதையொட்டிய பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “பாஜக 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி வருகிறது. அது கிடக்கட்டும் முதலில் 200 இடங்களைத் தாண்டுங்கள் என்று நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில் “அப்படித்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் அதிகமான இடங்களை வெல்வோம் என்று பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் முழக்கமிட்டது. ஆனால் கடைசியில் 77 இடங்களை மட்டுமே அவர்களால் பிடிக்க முடிந்தது. எனவே பாஜக சொல்வதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றும் மம்தா பேசினார்.

பாஜகவின் 400 பிளஸ் வெற்றி குறித்த மிதப்பான அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் தொடக்கத்தில் கதிகலங்கிப் போயிருந்தன. ஆனால் தேர்தல் நெருக்கத்தில் சற்று தெளிந்தவர்களாக, 400+ மிதப்பை சுட்டிக்காட்டியே பாஜகவை பகடி செய்து வருகின்றன. ’400க்கு மேலான தொகுதிகளில் வெற்றி நிச்சயம் என்றால், பாஜக எதிர்க்கட்சிகள் மீது ஏன் பாய வேண்டும், கைதுகளை நிகழ்த்துவது முதல் வங்கிக்கணக்குகளை முடக்குவது வரை ஏன் பதற்றப்பட வேண்டும்’ என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கின்றன.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

’2 முறை தொடர்ந்து ஆட்சியிலிருந்த பாஜக, தனது ஆட்சியின் சாதனைகளாக எதையும் குறிப்பிட்டு வாக்கு கேட்க வழியில்லாது தடுமாறுகிறது. மேலும் அதிருப்தி வாக்குகள் அதிகரிப்பதை கண்டும் பதற்றம் கொள்கிறது’ என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் பாஜகவை சாடி வருகின்றன. அவற்றின் வெளிப்பாடாகவே மம்தா பானர்ஜியின் இன்றைய பாஜக எதிர்ப்பு சவாலும் கிளம்பியிருக்கிறது.

அதிலும் நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக கர்ஜித்த மஹுவா மொய்த்ராவுக்கான வாக்கு சேகரிப்பு என்பதால், மம்தா பானர்ஜியின் இன்றைய பிரச்சார களத்தில் உக்கிரம் அதிகம் இருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in