‘தேர்தல் நேரத்தில் விசாரணை அமைப்புகள் துஷ்பிரயோகம்!’

எதிர்க்கட்சிகளுக்கு மம்தா கடிதம்!
‘தேர்தல் நேரத்தில் விசாரணை அமைப்புகள் துஷ்பிரயோகம்!’

தேர்தல் நேரத்தில், எதிர்க்கட்சிகளை மிரட்ட விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து விவாதிப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

மார்ச் 27-ம் தேதி கையெழுத்திடப்பட்ட அந்தக் கடிதத்தில், “அமலாக்கத் துறை, சிபிஐ, மத்திய விழிப்புணர்வு ஆணையம், வருமான வரித் துறை போன்ற மத்திய அமைப்புகள், நாட்டின் எதிர்க்கட்சிகளைக் குறிவைக்கவும், துன்புறுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கும் நோக்குடன் மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துவதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். தேர்தல் நேரங்களில்தான், விசாரணை அமைப்புகள் முடுக்கிவிடப்படுகின்றன. பாரபட்சமான அரசியல் தலையீடுகளின் காரணமாக, மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை” என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக விவாதிக்கும் வகையில் கூட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் நேரம் ஒதுக்க முன்வர வேண்டும் என்றும் அக்கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in