‘தொண்டனாக இருந்து தலைவராக உயர்ந்துள்ளேன்’ - காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே!

‘தொண்டனாக இருந்து தலைவராக உயர்ந்துள்ளேன்’ - காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு காந்தி குடும்பத்தைச் சாராத காங்கிரஸ் தலைவராக இன்று பதவியேற்ற மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேர்தல் வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து ஓய்வு எடுத்தார்.

காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் தனது முதல் உரையில், கட்சித் தேர்தலில் தனக்கு வாக்களித்த அனைத்து பிரதிநிதிகளுக்கும் கார்கே வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இன்று ஒரு ஒரு காங்கிரஸ் தொண்டர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எனது உழைப்பால், எனது அனுபவத்தால், கட்சியை உயர்த்துவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று நான் உறுதியளிக்கிறேன்." என்று கூறினார்.

மேலும், “கடினமான காலங்களில் காங்கிரஸை வழிநடத்தியதற்காக சோனியா காந்திக்கு நன்றி. அவரது தலைமையில், இரண்டு யுபிஏ அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற முதன்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதுபோல விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இந்திய நடுத்தர வர்க்கத்தினர் உட்பட அனைத்துத் தரப்பு மக்களின் அவலத்தைப் புரிந்து கொள்வதற்காக பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு எனது பாராட்டுகள். காங்கிரஸை முன்னோக்கி கொண்டு செல்ல கட்சியின் உதய்பூர் சிந்தனை திட்டத்தை செயல்படுத்துவது எங்கள் பொறுப்பு" என்று கூறினார்.

முன்னதாக, இன்று மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்பதற்கு முன், ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். காந்தி குடும்பத்திற்கு விசுவாசமான கார்கே பல்வேறு அமைச்சகங்களில் பொறுப்பு வகித்துள்ளார். இருப்பினும், சுபாவம் மற்றும் இயல்பினால் நிதானமானவர். மேலும், கார்கே வேறு எந்த பெரிய அரசியல் பிரச்சினையிலும், சர்ச்சையிலும் சிக்காதவர். பட்டியலின தலைவராக இருந்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அவர் உயர்ந்தது, 2023ல் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு வலுவான அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. அதுபோல 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக கட்சியை புதுப்பித்து மேம்படுத்தும் பணியையும் கார்கே பெற்றுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in