மாலத்தீவு மக்கள் மன்னிப்பு கோர விரும்புகிறார்கள்... மனமுருகும் முன்னாள் அதிபர் முகமது நஷீத்!

லட்சத்தீவில் பிரதமர் மோடி
லட்சத்தீவில் பிரதமர் மோடி
Updated on
2 min read

நடந்த நிகழ்வுகளுக்காக மாலத்தீவு மக்கள் மன்னிப்புக் கோர  விரும்புகிறார்கள் என்று மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் தெரிவித்துள்ளார். 

முன்னாள் அதிபர் முகமது நஷீத்
முன்னாள் அதிபர் முகமது நஷீத்

கடந்த ஜனவரி மாதம் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தனது பயணம் குறித்து 'எக்ஸ்' தளத்தில் வியந்து பதிவிட்டிருந்தார். "லட்சத்தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.

பிரதமரின் இந்த பதிவை கேலி செய்யும் வகையிலும், இனவெறியை தூண்டும் வகையிலும் மாலத்தீவைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் ஆளும் கட்சியினர் சிலர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். இந்தியர்கள் சுகாதாரமற்றவர்கள் என்றும், ஒருபோதும் மாலத்தீவுடன் இந்தியாவால் போட்டியிட முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

தற்போதைய மாலத்தீவு அதிபர் முகமது முய்சு
தற்போதைய மாலத்தீவு அதிபர் முகமது முய்சு

அவர்களின் இந்த கருத்திற்கு தற்போதைய அதிபர் முகமது முய்சு ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கருத்துகள் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாலத்தீவுக்கு எதிராக இந்தியர்களின் மனநிலை திரும்பியது.  மாலத்தீவு செல்வதை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்கள் வாயிலாக பலரும் கேட்டுக் கொண்டனர்.  அதைத் தொடர்ந்து மாலத்தீவுக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த  இந்தியர்கள் தங்கள் பயணத்தை ரத்து  செய்தனர். இதனால் மாலத்தீவின் சுற்றுலா வருவாய் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு அதிபருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

லட்சத்தீவில் பிரதமர் மோடி
லட்சத்தீவில் பிரதமர் மோடி

அந்த சமயத்தில், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களுக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்தியா வந்துள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

"இந்திய மக்களின் புறக்கணிப்பு மாலத்தீவை  பெரிதும் பாதித்துள்ளது. நடந்த நிகழ்வுகளுக்காக மாலத்தீவு மக்கள் மன்னிப்பு கோர விரும்புகிறார்கள். இந்திய மக்கள் சுற்றுலாவுக்காக வழக்கம்போல் மாலத்தீவுக்கு வர வேண்டும்,  எங்கள் விருந்தோம்பலில் எந்த குறையும் இருக்காது" என்று அப்போது அவர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in