மூன்று தொகுதிகள் வேண்டும்... முரண்டு பிடிக்கும் கமல்... திகைக்கும் திமுக!

நடிகர் கமலஹாசன்
நடிகர் கமலஹாசன்
Updated on
2 min read

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க திமுக தயாராக உள்ள நிலையில் மூன்று தொகுதிகள் வேண்டும் என்று கமல் தரப்பில் பிடிவாதம் பிடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. 

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயலாற்றி வருகின்றன. ஏற்கனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள்,  மதிமுக என வலுவோடு இருக்கும் திமுக கூட்டணியில் இந்த முறை நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணையும் என்று கூறப்படுகிறது.

திமுக கூட்டணியை பொறுத்தவரை, மய்யத்துக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது இன்னும் முடிவாகாத நிலையில், கமலுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட இருப்பதாக சொல்கிறார்கள். மய்யம் தரப்பிலோ 3 சீட்டுகள் என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம். இதுவரை சந்தித்த தேர்தல்களில் தங்களின் வாக்கு வங்கியை ஓரளவு நிரூபித்துள்ளதால், 3 தொகுதிகளை கேட்டு வருகிறார்களாம். ஒரு சீட் மட்டும் கொடுத்தால் அதனை ஏற்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார்களாம்.

கமலஹாசன்
கமலஹாசன்

திமுக கூட்டணியில், மய்யமும் சேர்ந்து பயணிக்கும்போது கூட்டணிக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், தேசத்தின் பிரபலமான நபர் என்பதால், கமல்ஹாசனின் பிரச்சாரம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை கூட்டணிக்கு நிச்சயம் கைக்கொடுக்கும். கமலின் பேச்சை கேட்பதற்கென்றே மக்கள் அதிகம் திரள்வார்கள். அதனால் திமுக கூட்டணியின்  வெற்றிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் தங்களுக்கு மூன்று இடங்கள் வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் பிடிவாதம் காட்டி வருகிறது.

கோவை, மதுரை, தென்சென்னை ஆகிய மூன்று தொகுதிகளைக் கேட்கிறது மய்யம் தரப்பு. இதில் கடந்த முறை போலவே, இந்த முறையும் கோவை தொகுதியில் போட்டியிடவே கமல் விரும்புவதாக தெரிகிறது. ஆனால்  கோவை, மதுரை இரண்டுமே, திமுக கூட்டணியிலுள்ள கம்யூனிஸ்ட்கள் வசம் உள்ளதால், கமலுக்கு அந்த தொகுதிகளைத் தர வாய்ப்பில்லை என்கிறார்கள். ஆக, தென்சென்னை மட்டுமே திமுக தரப்பில் ஒதுக்கலாம் என்கிறார்கள். அதை ஏற்றுக் கொள்வதா? இல்லை தனித்து போட்டியா? என்ற குழப்பத்தில் மநீம குழம்பி வருகிறது. இதனால் கூட்டணி உண்டா இல்லையா என்று இரண்டு கட்சியின் தொண்டர்களும் பெரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in