திமுகவுடன் கூட்டணியா, எந்த தொகுதியில் போட்டி? - இன்று உறுதி செய்கிறது மக்கள் நீதி மய்யம்!

திமுகவுடன் கூட்டணியா, எந்த தொகுதியில் போட்டி? - இன்று உறுதி செய்கிறது மக்கள் நீதி மய்யம்!

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை உறுதி செய்ய மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

கமலஹாசன்
கமலஹாசன்

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.  கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து களம் இறங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

அதற்கு ஏற்ற வகையில் நடிகர் கமல்ஹாசன் அண்மைக்காலமாக திமுகவுடன் இணக்கமாக இருந்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் கமல்ஹாசன் அதற்காக கோவை தொகுதியை ஒதுக்கக்கோரி திமுகவிடம் வலியுறுத்தி வருகிறார்.  ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோவை தொகுதியை இழக்க அக்கட்சி விரும்பவில்லை. அதனால் இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் போட்டியிட்ட பெரம்பலூர் தொகுதியை கமல்ஹாசனுக்கு ஒதுக்க திமுக தயாராக இருக்கிறது.

ஆனால் அங்கு போட்டியிட கமல்ஹாசன் விரும்பவில்லை. முதலில் கூட்டணியை இறுதி செய்யுங்கள், பிறகு தொகுதி குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று அவருக்கு திமுக தரப்பில் கூறப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

அதையடுத்து திமுகவுடன் கூட்டணியை இறுதி செய்ய அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று காலை 11:30 மணியளவில் சென்னையில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள அனைத்து செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   இந்த கூட்டத்திற்கு பிறகு திமுகவுடன் கூட்டணி குறித்த அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in