`அமைச்சர் பதவிக்கு பொன்முடி தகுதியற்றவர்; வாய்ப்பூட்டு போடுங்கள்'- முதல்வரை வலியுறுத்தும் ம.நீ.ம

`அமைச்சர் பதவிக்கு பொன்முடி தகுதியற்றவர்; வாய்ப்பூட்டு போடுங்கள்'- முதல்வரை வலியுறுத்தும் ம.நீ.ம

``அதிகார மமதையில் மிதக்கும் அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டு,  கடிவாளம் போடுங்கள்'' என தமிழக முதல்வரை மக்கள் நீதி மய்யம்  கட்சியின் தொழிலாளர் நல அணியின் மாநில செயலாளர் சு.ஆ. பொன்னுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து இன்று  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் அடுத்த சித்தலிங்கமடம் கிராமத்தின் எல்லையை பிரித்து எடப்பாளையம் தனி ஊராட்சியோடு சேர்க்கும் பணிகளை கண்டித்து சித்தலிங்கமடம் பகுதியில்  மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  அதனையடுத்து அங்கு  பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  அங்கே போராடிய பொதுமக்களில் ஒருவரை தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தி திட்டியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பொறுப்புள்ள அமைச்சரான  பொன்முடி,  பொறுப்பற்ற வகையில் சாமானிய மக்களை பார்த்து அவ்வாறு திட்டியதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் நியாயவிலைக்கடை கட்டிடத் திறப்பு விழாவின்போது ஒன்றியக் குழு தலைவரை பார்த்து  "ஏம்மா…நீ எஸ்.சி தானே…!" என சாதியை குறிப்பிட்டு பொதுநிகழ்வில் கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியவர், மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை வைத்து "பெண்கள் அரசு பேருந்தில் ஓசி பயணம்" செல்வதாக கூறி இலவச பேருந்து சேவையை பயன்படுத்தும் மகளிரையும் இழிவாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.  

இந்த நிலையில் தற்போது  மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பதன்  மூலம் பொன்முடி  பொறுப்புமிக்க அமைச்சர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறார். பொதுமக்கள் வரிப்பணத்தில், குளு, குளு வசதி கொண்ட, தேசியக் கொடி பறக்க, சைரன் பொருத்திய வாகனத்தில் பயணித்தால் வாக்களித்த பொதுமக்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்கிற அதிகார மமதையோடு உலா வரும் பொன்முடி போன்ற திமுக அமைச்சர்கள் தொடர்ச்சியாக இது போன்று இழிவாக பேசுவதை மனச்சாட்சி உள்ள எவராலும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தாங்கள் வானத்தில் இருந்து வந்துதித்த தேவதூதன் என்கிற எண்ணத்தோடு, தாங்கள்தான் சர்வ வல்லமை பொருந்தியவர்கள் என்கிற எண்ணமும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி போன்ற திமுக அமைச்சர்களின் ஆழ்மனதில் இருக்குமானால் அதனை அவர்கள் உடனடியாக மாற்றிக் கொண்டு, தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். 

தொடர்ந்து பொதுமக்களை கிள்ளுக்கீரையாக நினைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதையே வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழக அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டும், கடிவாளமும் போட்டு அவர்களை  கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வரை  மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் வலியுறுத்துகிறோம்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in