`மது விற்பனை குறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்களை மிரட்டுவதா?'- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ம.நீ.ம கண்டனம்

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

தீபாவளி பண்டிகையின்போது 708 கோடி ரூபாய் அளவிற்கு  மது விற்பனை நடைபெற்றது  குறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்களை மிரட்டும்  வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மக்கள் நீதி மய்யத்தின்  சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணியின் மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், `தீபாவளி பண்டிகையையொட்டி நடப்பாண்டில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகள் வாயிலாக சுமார் 708 கோடி ரூபாய்க்கு மேல் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது    தமிழகத்தில் நாளுக்கு நாள் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதையும், குடியினால் கணக்கிலடங்கா குடும்பங்கள் சீரழிந்து சிதிலமடைந்து போவதையும் காட்டுகிறது. 

அதுமட்டுமில்லாமல் தமிழர்களின் பணித்திறன் குறைந்து வடமாநில தொழிலாளர்கள் வருகை அதிகரித்து வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதையும் ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் உணர்த்துகின்ற மிகப்பெரிய எச்சரிக்கை மணியாகவே தெரிகிறது. இந்தியா முழுவதும் நடைபெறும் சாலை விபத்துகளில் முதலிடத்தில் இருப்பது மட்டுமின்றி அளவிற்கு அதிகமாக மது குடித்து உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக கணவரை இழந்த இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாகவும் தமிழகம் திகழ கட்டுப்பாடற்ற,  அரசின் தாராளமய மது விற்பனையே  பிரதானமான காரணமாக விளங்குகிறது. 

2016-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது ஆட்சிக்கு வந்ததும் பூரண மதுவிலக்கு கொள்கையை அமுல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக,  கடந்த அதிமுக ஆட்சியில் மது விற்பனைக்கு எதிராக வாயில் கறுப்பு துணி கட்டிக் கொண்டும், கறுப்பு ஆடைகள் அணிந்து, கறுப்பு கொடி பிடித்து போராடியது.

ஆனால் 2021ல் ஆட்சிக்கு வந்ததும் முந்தைய வாக்குறுதிகளையும், மது விற்பனைக்கு எதிராக முன்னெடுத்த போராட்டங்களையும் காற்றில் பறக்க விட்டு, விட்டதோடு மது விற்பனையில் அதிமுகவிற்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பண்டிகை காலங்களில் மது விற்பனைக்கு இலக்கு வைத்து திமுக அரசு செயல்படுவதை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும் நடப்பாண்டில் கடந்து போன தீபாவளி பண்டிகையையொட்டி மூன்று நாட்களில் மட்டும் சுமார் 708 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்றுள்ளது குறித்து பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் தமிழகத்தின் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரான வி.செந்தில்பாலாஜி,  மதுபான விற்பனை தொடர்பாக செய்தி வெளியிட்ட ஒரு குறிப்பிட்ட ஊடகத்தின் பெயரைக் குறிப்பிட்டு அந்த ஊடகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் தொணியில் கருத்துக்களை தெரிவித்திருப்பது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கின்ற செயலாகும். 

ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஊடகங்களை மிரட்டும் தொணியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்துக்கள் தெரிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். தற்போதைய சூழலில்  பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளம் தலைமுறையினர், தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்கத்தினர் என்கிற  பாரபட்சமின்றி அனைவரையும் மதுவிற்கு அடிமையாக்கி அதன் விற்பனையால் கிடைக்கின்ற வருமானம் மூலம் இலவச திட்டங்களை அறிவித்து தமிழக அரசை நடத்த நினைப்பது ஏற்புடையதல்ல என்பதை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சுட்டிக் காட்ட விரும்புகிறது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமுல்படுத்துவது என்பது கள்ளச்சாராய சந்தையை திறந்து வைக்க காரணமாக அமைந்து விடும் என்கிற பழைய புராணம் படிப்பதை ஆட்சியாளர்கள் கைவிட்டு விட்டு ஆக்கபூர்வமான வழிமுறைகளை அமுல்படுத்த முன் வர வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் மது விற்பனையை படிப்படியாக குறைக்க டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையையும், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தையும் தற்போதுள்ள நிலையில் இருந்து பாதியாக குறைத்திட வேண்டும்.

ஆதார் அட்டை மூலம் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி இளம் சிறார்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்கவும், மது வாங்க அனுமதியுள்ள ஒருவருக்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்கிற விதியையும் உடனடியாக கொண்டு வர வேண்டும். அத்துடன் மது குடிப்பதாலும், அளவிற்கு அதிகமாக குடிப்பதாலும் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் சிறப்பு பாடம் கொண்டு வருவதோடு, மதுவால் சீரழியும் குடும்பங்களுடைய நிலை குறித்த குறும்படங்கள் மூலம் அனைத்து தொலைக்காட்சி, பத்திரிகைகள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், மதுவால் வருமானம், அரசுக்கு அவமானம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in