கிராமசபை போல மாநகர சபைக்கூட்டங்கள்: தமிழக அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

கிராமசபை போல மாநகர சபைக்கூட்டங்கள்: தமிழக அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

கிராம சபையைப் போல நகர, மாநகர சபைக் கூட்டங்கள் நடத்தும் தமிழக அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது

இதுகுறித்து அந்த கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "1994-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் மூலம் அறிமுகமானது கிராம சபை. இதன் அதிகாரம் சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு சற்றுக் குறைந்தது என்றாலும், மக்கள் நேரடியாகப் பங்கேற்கும் சபை இதுவேயாகும். கிராம சபையின் சிறப்பை உணர்ந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஒவ்வொரு மேடையிலும் இதுகுறித்து தவறாது எடுத்துரைத்தார். மேலும், தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று, செயல்படாமல் இருந்த கிராம சபையை, வருடத்தின் குறிப்பிட்ட நாட்களில் நடத்த வேண்டுமென உறுதி செய்ய உறுதுணையாக இருந்தார். அதுதவிர, கிராம சபைக் கூட்டங்களில் மக்களுடன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இதேபோல, கிராமசபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள், அவரவர் பகுதிகளில் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழக அரசின் இந்த முடிவை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒரு விஷயம் நடைமுறைக்கு வந்துள்ளது பாராட்டுக்குரியது. நகர, மாநகர சபைகளிலும், உள்ளாட்சிகளில் நடைபெறும் பணிகள், அடுத்ததாக நடைபெற வேண்டியத் திட்டங்கள், மக்களுடைய கோரிக்கைகளை கேட்டு, தீர்மானம் நிறைவேற்றி, அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று, அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

மேலும், குடியரசு தினம், தொழிலாளர் நாள், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள், உள்ளாட்சி நாள் என கிராம சபை நடைபெறும் நாட்களில், நகர, மாநகர சபைகளையும் நடத்த வேண்டும். உரிய விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளின்படி இவற்றை அமைத்து, கிராம சபைக் கூட்டங்கள் செம்மையாக செயல்படுவதையும், சரியான முறையில் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். வெறும் கண் துடைப்பாக இருந்துவிடக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in