மக்கள் நீதி மய்யம் வலைதளப்பக்கம் திடீர் முடக்கம்: ஹேக்கர்கள் மீது நடவடிக்கை கோரி புகார்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் அர்ஜுன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் அர்ஜுன்மக்கள் நீதி மய்யம் வலைதளப்பக்கம் திடீர் முடக்கம்: ஹேக்கர்கள் மீது நடவடிக்கை கோரி புகார்

மக்கள் நீதி மய்யம் வலைதளப்பக்கம் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஹேக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை மத்திய சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் ஜனவரி 30-ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க இருப்பதாக பதிவிடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும், ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம் என மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் அர்ஜுன் இன்று வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன், "மக்கள் நீதி மய்யம் கட்சியின் வலைதள பக்கம் ஹேக் செய்யப்பட்டதில் அரசியல் சதி உள்ளது. எங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் மறைமுகமாக தாக்க முயல்கின்றனர்.

யார் யார் மீது சந்தேகம் இருக்கிறது என்ற பட்டியலை புகார் மனுவில் தெரிவித்துள்ளோம். காவல் துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். அதன்பிறகு ஹேக்கர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கிறோம். தற்போது வரை எங்களது சமூக வலைதளப்பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். ஆகையால் 48 மணி நேரத்திற்கு பிறகு வழக்கம் போல் மக்கள் நீதி மய்ய வலைதளப்பக்கம் செயல்படும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in