
திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து நாளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளை பிரச்சாரம் செய்ய உள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக களமிறக்கப்பட்டு சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுவரை பிரச்சாரம் செய்யவில்லை. அதே நேரத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதேபோல் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளை பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள நாளை ஈரோடு வருகிறேன். ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம்" என்று கூறியுள்ளார்.