
தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாகவே ஒப்பந்த அடிப்படையில் பணிசெய்துவரும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசு சார்பில், கடந்த 2012-ம் ஆண்டு 16,549 ஆசிரியர்கள் பகுதி நேரமாக எடுக்கப்பட்டனர். இவர்கள் கடந்த பத்தாண்டுகளாக குறைவான தொகுப்பூதியத்தில் பணி செய்து வருகின்றனர். பத்தாயிரம் ரூபாயே இவர்களுக்கு தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. இவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கேட்டு பல கட்ட ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தியும் உரிய தீர்வு இல்லை. இப்போது பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக தேர்தல் அறிக்கையிலேயே, பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இனியும் காலந்தாழ்த்தாமல் அரசு உடனே பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும்.”என அவர் கூறியுள்ளார்.