5 மாநிலத்திலும் தோல்வி: காங்கிரஸ் செய்த தவறுகள் என்ன?

5 மாநிலத்திலும் தோல்வி: காங்கிரஸ் செய்த தவறுகள் என்ன?

2024 மக்களவைத் தேர்தலின் முன்னோட்டமாகப் பார்க்கப்பட்ட, நாடே ஆவலுடன் எதிர்பார்த்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. அதில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜகவும், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியும் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. 5 மாநிலங்களிலும் படுதோல்வியடைந்திருக்கிறது காங்கிரஸ். இதில் பஞ்சாப் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த மாநிலம் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியதிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்விக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். தமிழ்நாட்டு வாக்காளர்கள் பார்வையில் ஒரு காரணம் பளிச்சென தெரிகிறது. அது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை. பிரதான எதிர்க்கட்சியாக நடந்துகொள்ள வேண்டிய காங்கிரஸ் கட்சியின் திறமையின்மை. உட்கட்சி பூசல். எல்லாவற்றுக்கும் மேலாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பதையே அறுதியிட்டுச் சொல்லாத அக்கட்சியின் பொறுப்பற்றத்தனம்.

சட்டப்பேரவைத் தேர்தலை ஒரு மாதிரியாகவும், மக்களவைத் தேர்தலை வேறு மாதிரியாகவும்தான் வாக்காளர்கள் பார்க்கிறார்கள் என்றாலும், ஒரு பொதுத்தன்மையும் இருக்கிறது. அது எந்தக் கட்சி வெற்றிபெறும் அல்லது எந்தக் கட்சி ஆளுங்கட்சியை வீழ்த்துவதில் முன்வரிசையில் நிற்கிறது என்பதைப் பார்த்து வாக்களிக்கும் போக்கு. அதாவது, வாக்களார்கள் தங்கள் ஓட்டு வீணாவதை ஒருபோதும் விரும்புவதில்லை.

2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தனித்துக் களமிறங்கிறது. எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் விஷயத்தில் திமுக தோற்றுப்போனது. தனது பண பலத்தால் எதிர்க்கட்சிகள் திமுக பக்கம் சேராமல் அதிமுக பார்த்துக் கொண்டது என்றும் சொல்லலாம். வாக்காளர்கள் பார்த்தார்கள், ஒரு பக்கம் புஜபல பராக்கிரமசாலியாக நிற்கிற அதிமுக, எதிரிலோ பழம் நழுவி பாலில் விழுந்துவிடாதா என்று கடைசி நிமிடம் வரையில் தேமுதிக அலுவலகத்தை எட்டிப்பார்த்துக் கொண்டே பலவீனமாக நின்ற திமுக. மக்கள் வெல்லும் கட்சிக்கே வாய்ப்பளித்தார்கள். அதே நிலைதான் இந்த 5 மாநில தேர்தல்களிலும் நடந்திருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியால் 10 தொகுதிகளில் கூட வெல்ல முடியாது என்பது அங்குள்ள யாருக்கும் தெரியும். உண்மையிலேயே பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால், ஓரளவு பலமாக இருக்கிற சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தந்திருக்க வேண்டும். அவர் கொடுக்கிற தொகுதிகளை வாங்கிக்கொண்டு நின்றிருக்கலாம். அதைவிட்டுவிட்டு ராகுல்காந்தியும், பிரியங்காவும் தங்கள் உழைப்பையும், நேரத்தையும் அகிலேஷ் யாதவ் வாக்குகளைச் சிதறடிப்பதிலேயே வீணாக்கியிருக்கிறார்கள். மறைமுகமாக யோகி ஆதித்யநாத்தின் வெற்றிக்கு உழைத்திருக்கிறார்கள்.

2019 மக்களவைத் தேர்தலில் டெல்லியில் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஈகோ பார்த்து, கடைசியில் வாஷ்அவுட் ஆனது காங்கிரஸ் கட்சி. அந்த ஈகோவை இன்னும் விடாததால், இன்று ஆம் ஆத்மியிடம் பஞ்சாப்பில் ஆட்சியையே பறிகொடுத்திருக்கிறது காங்கிரஸ்.

காங்கிரஸ் தலைமையைவிட வலுவாக பாஜகவை எதிர்ப்பவர் திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி. அவருடனும் கூட இணக்கமான உறவை காங்கிரஸ் கட்சியால் பேண முடியவில்லை. அவரும் விட்டுக்கொடுக்கக் கூடியவர் இல்லை என்றாலும்கூட, பாஜகவை வீழ்த்தும் பொறுப்புள்ள கட்சியான காங்கிரஸ் இதில் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருக்கலாம். அந்த அம்மையார் மெனக்கிட்டு மேற்கு வங்கத்தில் இருந்து கோவாவுக்கு வந்து, காங்கிரசுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளில் ஒரு பங்கை கபளீகரம் செய்துவிட்டுப் போயிருக்கிறார். 5 மாநிலத்தில் நிச்சயம் கோவாவில் மட்டுமாவது வெல்வோம் என்று காங்கிரசுக்கு இருந்த நம்பிக்கையையும் தகர்த்துவிட்டுப் போயிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டிடம் இருந்து பாடம் கற்க வேண்டியதிருக்கிறது. 2016 தேர்தலில் திமுக செய்த அதே தவறை இன்று காங்கிரஸ் செய்திருக்கிறது. அன்று திமுக இருந்த அதே நிலையில் இன்று இருக்கிற காங்கிரஸ் கட்சி, 2022-ல் வெற்றியாளராக இருக்கிற திமுகவிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ளலாம். அதில் ஒன்று, தான்தான் பெரிய கட்சி என்கிற ஈகோவை விட்டொழிப்பது. மதிமுகவுக்கு ஓட்டு வங்கியே கிடையாது என்று தெரிந்தாலும் அக்கட்சிக்கு 2 எம்பி, 4 எம்எல்ஏ, மற்றும் உள்ளாட்சி பதவிகளை விட்டுக் கொடுத்திருக்கிறது திமுக. இன்னும் சில பல குழுக்களிலும் மதிமுகவினரை அமர்த்தி அழகுபார்க்கிறது திமுக. இப்படி ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் உரிய மரியாதை தருகிறது திமுக. கூட்டணி கட்சித் தலைவர் களை எல்லாம் ஒன்று திரட்டி வைத்திருக்கிறது. இது வெறும் தேர்தல் கூட்டணியாக இல்லாமல், கொள்கைக் கூட்டணியாக 2017-ம் ஆண்டில் இருந்தே தொடர்கிறது.

இதே பாணியில், காங்கிரஸ் கட்சியும் செயல்பட்டாக வேண்டும். விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை என்பதை காங்கிரஸ் கட்சி இனியாவது உணர வேண்டும். மு.க.ஸ்டாலினை அண்ணன் என்று அழைத்த ராகுல்காந்தி, அண்ணன் காட்டிய வழியில் பயணிக்க முற்படலாம்.

ஒருவகையில் இந்தத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு நல்லதுதான். தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ள இன்னும் 2 ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது. தன்னை வலுப்படுத்திக்கொண்டு, பாஜகவை வீழ்த்தும் வல்லமையுள்ள கட்சி என்று களத்தில் கம்பீரமாக நிற்க வேண்டும் காங்கிரஸ். ராகுலுக்கு விருப்பம் இல்லை என்றால், பிரியங்காவை கூட தலைவராக அறிவிக்கலாம். கூடவே, ஈகோவை விட்டொழித்து, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்ட வேண்டிய பொறுப்பும் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. அதைச் செய்யவில்லை என்றால், மூன்றாவது முறையும் மத்தியில் பாஜக ஆட்சி அமைவதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in