`பாஜகவிலிருந்து இதற்காகத்தான் வெளியேறினேன்’- அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மைதிலி வினோ!

`பாஜகவிலிருந்து இதற்காகத்தான் வெளியேறினேன்’- அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மைதிலி வினோ!

பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி வினோ, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்து திமுகவில் இணைவது குறித்துப் பேசியதால், கட்சிக்குக் களங்கம் விளைவித்ததாக கூறி அவரை நீக்குவதாகக் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நேற்று அறிக்கை வெளியிட்டார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் மைதிலி வினோ தனது முகநூல் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “பாஜகவில் 22 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பினராக இணைந்து கடின உழைப்பால் மாவட்ட மகளிரணி, மாநில மகளிரணி என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வந்த நான் அண்மைக் காலமாக பாஜக-வின் மாவட்ட தலைமையின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் கட்சியிலிருந்து விலகும் முடிவுக்கு வந்தேன். அதைத் தொடர்ந்து தான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களைச் சந்தித்து திமுகவில் இணையும் முடிவுக்கு வந்தேன். ஆனால் இன்று கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாலும் கட்சிக்குக் களங்கம் விளைவித்ததாலும் என்னைக் கட்சியை விட்டு நீக்குவதாக தாங்கள் அறிக்கை விட்டுள்ளீர்கள். நான் என்ன களங்கம் விளைவித்தேன் என்பதை தங்களால் கூற முடியுமா?

பாஜக என்றால் மக்களுக்கு என்னவென்றே தெரியாத காலகட்டத்தில் கட்சிக்காகப் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்தி கட்சியில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோரை இணைத்து கோவையில் பாஜக வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பாடுபட்டுள்ளேன் என்பது உண்மையான பாஜகவினருக்கு நன்றாகத் தெரியும். என்னைப் போன்று கட்சிக்காக உழைத்து இன்று மாவட்ட தலைமையால் புறக்கணிக்கப்பட்டுள்ளவர்கள் ஏராளமாக உள்ளனர். பாஜகவில் பெண்கள் யாருமே இல்லாத காலகட்டத்தில் மகளிரணியைக் கட்டமைத்தவர்களில் எனது பங்கு அலாதி என்பது தாங்கள் அறியாததே.

ஏனென்றால் தாங்கள் பாஜகவிற்கு புதியவர். அதிலும் வந்த உடன் மாவட்ட தலைவர் பதவியைப் பிடித்ததால் அடிப்படை என்ன என்பது தெரியாமல் இருப்பது நியாயம் தான். பாஜகவில் உழைப்பவருக்குப் பதவி என்ற நிலை மாறி இன்று பணம் படைத்தவருக்கே பதவி என்ற நிலையல்லவா நிலவுகிறது. என்னைப் போன்ற உண்மை விசுவாசிகள் பலரும் தங்களது தவறான எதேச்சதிகார போக்கால் சுயமாக முடிவெடுக்கத் தொடங்கியுள்ளனர் என்பது தங்களுக்குத் தெரியுமா? கட்சியின் செயல்பாடுகள் உண்மை தொண்டனுக்குத் தெரிவதில்லை. கட்சியின் ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்குக் கட்சியினருக்கு தகவல் அளிக்காமல் கூலிக்கு ஆட்களை அழைத்து வந்து கூட்டத்தைக் காட்டுகிறீர்கள். இதைக் கேட்டால் கட்சி கட்டுப்பாட்டை மீறியவர் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். கட்சியின் மூத்த நிர்வாகிகளை அவமதித்துப் புறந்தள்ளி பணம் படைத்தவர்களுக்குப் பதவி வழங்கும் தங்களைப் போன்றவர்கள் மாவட்ட தலைமை பொறுப்பில் உள்ள வரை இங்குத் தாமரை மலர வாய்ப்பில்லை” என காட்டமாக கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in