ஜாமீனில் வந்தவுடனேயே அடுத்த வழக்கு - பதவியை ராஜினாமா செய்வேன்: கொதிக்கும் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர்

ஜாமீனில் வந்தவுடனேயே அடுத்த வழக்கு - பதவியை ராஜினாமா செய்வேன்: கொதிக்கும் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர்

கடந்த 72 மணி நேரத்தில் என் மீது இரண்டு பொய் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதனால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என்று மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஜிதேந்திர அவாத் தெரிவித்துள்ளார்.

சத்ரபதி சிவாஜியின் வரலாற்றை திரித்து எடுக்கப்பட்டதாக தானேயில் மராத்தி திரைப்படமான ‘ஹர் ஹர் மகாதேவ்’ திரையிடலுக்கு இடையூறு விளைவித்ததற்காக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட பின்னர் ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜிதேந்திர அவாத் மீது பாலியல் தாக்குதல் வழக்கு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 13 அன்று மும்ப்ராவில் பாலம் திறக்கும் நிகழ்ச்சியின் போது ஜிதேந்திர அவாத், அந்தப் பெண்ணை தள்ளிவிட்டதாகக் குற்றம்சாட்டி ஐபிசி பிரிவு 354 (பெண்ணைத் தாக்குதல் அல்லது குற்றவியல் பலாத்காரம் செய்தல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், “கடந்த 72 மணி நேரத்தில் பாலியல் தாக்குதல் வழக்கு உட்பட என் மீது இரண்டு பொய் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதனால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். காவல்துறையின் இந்த அட்டூழியத்திற்கு எதிராக நான் போராடுவேன். ஜனநாயகத்தை படுகொலை செய்வதை என்னால் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்று தனது ட்வீட்டில் கூறினார். இந்த எஃப்ஐஆர் மீது கோபமடைந்த என்சிபி தொண்டர்கள் மும்ப்ரா காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தி டயர்களை எரித்தனர்.

முன்னதாக, 'ஹர் ஹர் மகாதேவ்' படத்தின் திரையிடலை வலுக்கட்டாயமாக நிறுத்தியதற்காக, ஜிதேந்திர அவாத் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சனிக்கிழமை ஜாமீனின் விடுவிக்கப்பட்டார்.

அவாத் மீதான இந்த வழக்குகளுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே மற்றும் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பிரிவு) தலைவர் ஆதித்யா தாக்கரே ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “ இந்த நடவடிக்கைக்குப் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை, சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பார்கள்” என்று கூறினார்.

ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை பிளவுபடுத்தி பாஜக ஆதரவுடன் ஆட்சியமைக்கும் வரை, உத்தவ் தாக்கரேவின் முந்தைய சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் அரசாங்கத்தில் ஜிதேந்திர அவாத் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in