`தமிழகத்துக்கு இழைக்கப்பட்டு வந்த வஞ்சனைகளில் ஒன்று சரி செய்யப்பட்டுள்ளது'- சு.வெங்கடேசன்

மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்
மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்

ஒன்றிய அரசின் அணுசக்தித் துறையால் நடத்தப்பட்ட தேர்விற்கு, தமிழகத்தில் தேர்வு மையம் அமைத்துக் கொடுத்துத் தேர்வினை நடத்தியமைக்காக ஒன்றிய அரசுக்கு எம்பி சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய அரசின் தேர்வு மையங்களில் தொடர்ந்து தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதைக் குறிப்பிட்டு நான் கடந்த ஜூன் 29, 2021ல் அணுசக்தித் துறையின் எரிபொருள் வளாக தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.முருகையாவிற்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன்.

அதில், அத்துறை ஜூன் 21, 2021ல் வெளியிட்டிருந்த அறிவிக்கையில், ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவு - 1 பதவிக்கான முதல்நிலை (ஸ்கிரீனிங்) தேர்வுக்காக(Stage I Preliminary (Screening) Test for the post of Stipendary Trainee Category - I) நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 6 மையங்களில் ஒரு மையம் கூட தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வர்கள் பெங்களூரு சென்று தேர்வெழுத வேண்டியுள்ளது என்று சுட்டிக் காட்டி இருந்தேன்.

உயர்கல்வி விகிதத்திலும், எண்ணிக்கையிலும் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள ஒரு மாநிலத்தை ஒன்றிய அரசு இப்படித்தான் அணுகுமா? தமிழகத்திலும் ஒரு தேர்வு மையம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அணுசக்தித் துறைக்கு நான் எழுதிய கடிதத்திற்கு முருகையாவிடமிருந்து பதில் கடிதம் வந்துள்ளது.

அதில், "வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கான தேர்வு மையம் ஜிர்கோனியம் வளாகம், பழைய காயல், தூத்துக்குடி மாவட்டம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டு எழுத்துத் தேர்வும் நேர்காணலும் மே 5 முதல் 7, 2022 வரை அணு எரிபொருள் வளாகத்தால் நடத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றுள்ளார். ஓராண்டு ஆனாலும் தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் வஞ்சனைகளில் ஒன்றை சரி செய்ய முடிந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in