அடுத்த மாதம் வெளியாகிறது மதுரை மெட்ரோ ரயில் சாத்தியக்கூறு அறிக்கை!

அடுத்த மாதம் வெளியாகிறது மதுரை மெட்ரோ ரயில் சாத்தியக்கூறு அறிக்கை!

சென்னையில் ஏற்கெனவே மின்சார ரயில் திட்டம் செயல்பாட்டில் இருந்தும், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கூட்டம் அதிகம் இல்லை என்றாலும்கூட அங்கே இரண்டு ரயில் சேவைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. கோவை, மதுரை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துக்கொண்டே வருவதால், இந்நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

திமுகவைப் போலவே அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் தனது தேர்தல் அறிக்கையில் இத்திட்டத்தைக் குறிப்பிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் மதுரை எம்பி சு.வெங்கடேசன், இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு மெட்ரோ நிர்வாகம் அளித்துள்ள பதிலில், மதுரைக்கு மெட்ரோ ரயில் கொண்டுவருவது தொடர்பாக ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் 19.01.2022 அன்று மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் பற்றி எழுதி இருந்த கடிதத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் ஆர்.எம்.கிருஷ்ணன் 05.04.2021 தேதியிட்ட பதில் கடிதத்தை அளித்துள்ளார். அதில், 'மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய இரண்டாம் தட்டு நகரங்களுக்கு மெட்ரோ வெகு விரைவு போக்குவரத்து திட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறு ஆய்வு அறிக்கைக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு ஏற்கெனவே வழங்கியுள்ளது. மதுரையில் மெட்ரோ வெகு விரைவு போக்குவரத்து திட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறு ஆய்வு அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கெனவே விடுக்கப்பட்டு அப்பணி பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் (கன்சல்டன்சி) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நடந்தேறி வருகிறது. இறுதி சாத்தியக் கூறு அறிக்கை மே 2022-ல் தயாராகி விடுமென எதிர்பார்க்கப்படுகிறது' என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. மதுரை மக்களுக்கு நல்ல செய்தி. விரைவில் இப்பணி மேற்கொள்ளப்பட என்னுடைய இடையுறா முயற்சிகள் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in