மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்களை சரிகட்ட மதுரை மேயர் வைத்த விருந்து... 70% பேர் புறக்கணிப்பு: அதிர்ச்சியூட்டும் பின்னணி

மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்களை சரிகட்ட மதுரை மேயர் வைத்த விருந்து... 70% பேர் புறக்கணிப்பு: அதிர்ச்சியூட்டும் பின்னணி

மதுரை மேயர் வைத்த விருந்தை 4 திமுக மாவட்டச் செயலாளர்கள், அவரது ஆதரவு திமுக கவுன்சிலர்கள் 70 சதவீதம் பேர் புறக்கணித்தனர். ஸ்டாலின், கலைஞர் புகைப்படம், பெயர் அழைப்பிதழில் இடம்பெறாததால் அவர்கள் புறக்கணித்ததாக தெரிவித்தனர்.

மதுரை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த இந்திராணி உள்ளார். பதவியேற்ற நாள் முதல் தற்போது வரை சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தனக்கு உதவியாக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்ணை ஊதியமில்லாத உதவியாளராக நியமித்தார். ஆனால், அவர் தான் நிழல் மேயர் போல் செயல்பட்டார். அத்துடன் அவரை மாநகராட்சி கூட்டங்கள், ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்க மாமன்ற கூட்டத்தில் தீர்மானத்தை மேயர் நிறைவேற்றினார்.

விருந்துக்கான மேயரின் அழைப்பிதழ்.
விருந்துக்கான மேயரின் அழைப்பிதழ்.

மேலும் மேயரின் கணவர் பொன்வசந்த், மாநகராட்சி நிர்வாகங்களில் தலையீடுவது இந்திராணிக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. அதனால், மேயர் இந்திராணிக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத நிலை உள்ளது.

அதனால், இன்று மதுரை மாநகராட்சி கூட்டம் முடிந்ததும் மேயர் இந்திராணி சமரச முயற்சி மேற்கொள்ள முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு மதுரை அண்ணாநகரில் உள்ள தனது மேயர் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டத்துடன் கூடிய மதிய உணவு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் சிறப்பு விருந்தினராக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.

ஆனால் அமைச்சர் பி.மூர்த்தி, மாநகர வடக்கு திமுக மாவட்டச் செயலாளர் பொன்.முத்துராமலிங்கம், தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி, புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் பங்கேற்கவில்லை. மேலும் திமுக கவுன்சிலர்கள் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்த விருந்ததை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. விருந்து நிகழ்ச்சிக்காக மேயர் இல்லம் அலங்காரம் செய்து தடபுடலாக இருந்தது.

இதுகுறித்து திமுக கவுன்சிலர்கள் கூறுகையில், ‘‘விருந்தில் பங்கேற்க மேயர் அனுப்பிய அழைப்பிதழில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பெயர் மட்டுமே பிரதானமாக இருந்தது. திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பெயர், புகைப்படம் அழைப்பிதழில் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் இந்த விருந்தில் பங்கேற்பது முறையில்லை என்று புறக்கணித்தோம் ’’ என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in