பாஜகவின் மதுரை மேயர் வேட்பாளர் இஸ்லாமிய பெண்?

முன்னாள் அதிமுக கவுன்சிலரான மதுரை டிவிஎஸ் நகர் ராஜ.சீனிவாசன் இன்று பாஜகவில் இணைந்தார்.
முன்னாள் அதிமுக கவுன்சிலரான மதுரை டிவிஎஸ் நகர் ராஜ.சீனிவாசன் இன்று பாஜகவில் இணைந்தார்.

மதுரையில் மாநகராட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கெனவே அதிமுகவில் இருந்து முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவரை தன் பக்கம் ஈர்த்த பாஜக, இன்று மேலும் 2 அதிமுகவினரை இழுத்தது. முன்னாள் அதிமுக கவுன்சிலரான டிவிஎஸ் நகர் ராஜ.சீனிவாசன், புறநகர் மாவட்ட ஜெ பேரவைச் செயலாளர் எஸ்.எஸ்.டி.மனோகரன் ஆகியோர் இன்று மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த மாவட்ட தலைவர் சரவணன், “இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளோம். மொத்தமுள்ள 100 வார்டுகளில் மூத்த நிர்வாகிகள், இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், அனைத்து சமூகத்தினர் என்று எல்லோருக்கும் சீட் கொடுத்திருக்கிறோம். குறிப்பாக சிறுபான்மையினருக்கும் உரிய ஒதுக்கீடு தந்துள்ளோம். மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராகவோ, துணை மேயர் வேட்பாளராகவோ இஸ்லாமியர் ஒருவர் முன்மொழியப்படும் வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து தலைமை விரைவில் அறிவிக்கும்.

அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் கவுன்சிலர் லட்சுமிக்கு சீட் தரப்பட்டுள்ளது. அதேபோல அதிமுக, திமுக, தேமுதிகவில் இருந்து வந்துள்ள மேலும் சிலருக்கும் சீட் தரப்படும். ஒரு கட்சி முழுமையாக பாஜகவில் இணையவிருக்கிறது. மாநில தலைவர் அண்ணாமலை மதுரை வரும்போது அந்த நிகழ்ச்சி நடைபெறும். எங்கள் வியூகங்கள் எல்லாவற்றையும் முழுமையாகச் சொல்ல முடியாது. ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன். மதுரை மாநகராட்சித் தேர்தலில் ஓர் அதிசயம் நிகழும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in