மதுரை : மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்; சேதமடைந்த மேற்கூரையால் பயணிகள் அச்சம்!

சேதமடைந்த பேருந்து நிலையம்
சேதமடைந்த பேருந்து நிலையம்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை பராமரிக்க ஒப்பந்ததாரர்கள் முன்வராததால், மேற்கூரைகள் சேதமடைந்து கீழே விழத் தொடங்கியுள்ளன. இதனால், அந்த பகுதியைக் கடந்து செல்லும் பயணிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர்.

கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் புதிய பஸ்நிலையங்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்த அடிப்படையில் மதுரை மாட்டுத்தாவணியில் பிரமாண்ட பஸ்நிலையம் கட்டப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கடந்த 1999-ம் ஆண்டு மே 25-ம் தேதி திறந்து வைத்தார். அந்த காலக்கட்டத்தில் சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு அடுத்து தமிழகத்திலே இரண்டாவது பஸ்நிலையமாக செயல்பட்டது.

பஸ்நிலையம் வளாகத்தில் இலவச கழிப்பிட அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனிக்கழிப்பிட அறைகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டு பஸ்நிலையம் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டது. அதனால், ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற பஸ்நிலையமாக மாட்டுத்தாவணி பஸ்நிலையம் சிறந்து விளங்கியது. காலப்போக்கில், பஸ்நிலைய பராமரிப்பில் மாநகராட்சி கவனம் செலுத்த தவறியது.

பஸ்நிலையம் வளாகம் கடைகள், இரு சக்கர வாகன காப்பகம் மூலம் கோடிகணக்கில் வருவாய் ஈட்டும் மாநகராட்சி, பஸ்நிலையத்தை பராமரிக்க தவறியது. இந்த பஸ்நிலையத்திற்கு தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் கருணாநிதி கட்டிய இந்த பஸ்நிலையத்திற்கு எம்ஜிஆர் பஸ்நிலையம் என பெயர் மாற்றம் செய்து அழகுப்பார்த்த மாநகராட்சி, பஸ்நிலையத்தை பராமரிக்கவில்லை.

இலவச கழிப்பிட அறைகளும் படிபடியாக ரத்து செய்யப்பட்டு, அதனையும், மாநகராட்சி கட்டண கழிப்பிட அறையாக மாற்றியது. அதனை பராமரிக்கும் தனியார், முறையான தண்ணீர் வசதி, சுகாதார வசதிகளை ஏற்படுத்தவில்லை. அதனால், பயணிகள் கட்டணம் கொடுத்து அந்த கழிப்பறைக்கு செல்வதற்கு பதில் இரவு நேரத்தில் பஸ்நிலையத்தின் ஓரத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தனர்.

மேலும், பஸ்நிலைய கடைகளில் இருந்து வீணாகும் குப்பைகள், உணவு கழிவுகள் முறையாக சேகரிக்கப்படாமல் அவையும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. அதனால், சுகாதாரமில்லாத பஸ்நிலையமாக மாறிய, தற்போது ஐஎஸ்ஓ தரச்சான்றை இழந்து சுகாதாரமில்லாமல் உள்ளது.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டாக பஸ்நிலையத்தின் கட்டிடங்கள் ஆங்காங்கே விரிசல் விட்டு மேற்கூரை சிமெண்ட் பூச்சிகள் உடைந்து கீழே விழுகின்றன. சிமெண்ட் பூச்சிகள் கீழே விழுந்ததால் காங்கிரீட் கம்பிகள் வெளியே தெரியக்கூடிய வகையில் பஸ்நிலையத்தின் மேற்கூரை உள்ளன.

அதனால், பயணிகள், அந்த வழியாக நடந்து செல்லவும், பஸ்களுக்காக காத்திருக்கவும் அச்சமடைந்துள்ளனர். தற்போது திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மாநகராட்சி ரூ.2 கோடிக்கு பஸ்நிலையம் பராமரிப்புக்கு ஒப்புதல் பெற்று நிதி ஒதுக்கியது. ஆனால், தற்போது வரை டெண்டர் விட்டு பணிகள் தொடங்கப்படவில்லை.

மேயர் இந்திராணி
மேயர் இந்திராணி

மேயர் இந்திராணியிடம் இது குறித்து கேட்டபோது, ‘‘திட்டமதிப்பீட்டை மாநகராட்சி பொறியாளர் மட்டுமே முடிவு செய்வதில்லை. மாநகராட்சி பொறியாளர் முடிவு செய்ததை நகராட்சி நிர்வாகப்பிரிவு பொறியாளர்களும் மறு மதிப்பீடு செய்தே டெண்டர் விடப்படுகிறது. விரைவில் டெண்டர் விட்டு பணிகள் தொடங்கப்படும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in