மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்குக் கிடைக்குமா?

சு.வெங்கடேசன் எம்.பி
சு.வெங்கடேசன் எம்.பி
Updated on
4 min read

மதுரை மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கடந்த முறை வெற்றி பெற்ற சு.வெங்கடேனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தேர்தல்
தேர்தல்

மக்களவை தேர்தல்

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே களத்தில் அனல் பறக்கத் தொடங்கி விட்டது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொகுதி பங்கீடு, எந்த தொகுதியில் போட்டியிடுவது என்ற அடுத்தக்கட்ட நகர்விற்கு மாநில, தேசிய கட்சிகள் இறங்கியுள்ளன.

தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுக்கள் மக்களைச் சந்தித்து வருகின்றன. மக்களிடம் கருத்துக்களைப் பெற்று அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்யப்படும் என்று திமுக அறிவித்த நிலையில், அதே அஸ்திரத்தை அதிமுகவும் எடுத்துள்ளது. இந்த நிலையில் சுவர் விளம்பரங்களைப் பிடிக்க ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டு வருகின்றன.

சு.வெங்கடேசன் எம்.பி
சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை மக்களவை தொகுதி

இந்த நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் 17வது தேர்தலில் யார் போட்டியிடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் மதுரையில் 7 வேட்பாளர்கள் கட்சிகள் சார்பாகவும், 20 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிட்டனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சி வேட்பாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன் 1,39,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களவைத் தொகுதி உறுப்பினராகியுள்ளார்.

அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட வி. வி. ஆர். இராஜ் சத்யன் 3,07,680 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அமமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் சட்டப்பேரவை தலைவர் கா.காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை 85,747 வாக்குகளையும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் எம். அழகர் 85,048 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள் 42,901 வாக்குகளையும் பெற்றனர்.

மதுரை
மதுரை

கடந்த மக்களவைத் தேர்தலில் இருந்த கள நிலவரம் தற்போது இல்லை. ஏனெனில், கூட்டணியில் இருந்த பாஜகவை அதிமுக கழட்டி விட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தேர்தலில் அந்த கட்சி அமமுக, ஓபிஎஸ் மற்றும் சிறு கட்சிகளின் கூட்டணியோடு களமிறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி உருவாக்கியுள்ளது.

இதன் காரணமாக மதுரை மக்களவைத்தேர்தல் களம் இந்த முறை புதிய தோற்றம் பெற்றுள்ளது. இதுவரை மதுரை மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 8 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக மற்றும் ஜனதா, அதிமுக, தமாகா தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

மதுரை மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்த தளபதியின் மகள் மேகலா.
மதுரை மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்த தளபதியின் மகள் மேகலா.

எனவே, இந்த முறை மதுரை மக்களவைத் தொகுதியை நான்காவது முறையாக கைப்பற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் பரபரப்பாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், மதுரை மக்களவைத் தொகுதியில் தங்கள் கட்சி தான் போட்டியிட வேண்டும் என்று திமுகவிற்குள் குரல்கள் எழும்பியுள்ளன.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்குத் தான் மதுரை தொகுதி என்று பேசி வந்த திமுக நிர்வாகிகள், அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் என்ற காரணத்தால், தங்கள் கோரிக்கைக் குரல்களை சற்று குறைத்துக் கொண்டுள்ளனர்.

இதனால், திமுகவில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கோ.தளபதியின் மகள் மேகலாவை களமிறக்கலாம் என்ற குரல்களும் எழுந்துள்ளன. மதுரை மேயர் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களில் மேகலாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சு.வெங்கடேசன் எம்.பி
சு.வெங்கடேசன் எம்.பி

ஆனால், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு தான் இந்த முறை மதுரை தொகுதி ஒதுக்கப்படும் என்று அக்கட்சியினர் உறுதியாக நம்புகின்றனர். அத்துடன் திமுகவின் குட் புக்கில் உள்ள சு.வெங்கடேசனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்றே பொதுவான கருத்தாக உள்ளது.

மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து மக்களவையில் குரல் எழுப்பி வரும் சு.வெங்கடேசன், மதுரை தொகுதியில் மாணவர்களுக்கு கல்விக் கடன் கிடைக்க தொடர்ந்து முகாம்களை நடத்தி வருகிறார். அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடத்தி அவர்களின் நல உதவி கிடைப்பதில் முயற்சி எடுத்து வருகிறார்.

பசுமைப் படிப்பக வளாகம்
பசுமைப் படிப்பக வளாகம்

போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் வசதியாக உட்கார்ந்து படிப்பதற்காக மதுரை காந்திமியூசியம் அருகே பசுமைப் படிப்பக வளாகம் என்ற பூங்கா சு.வெங்கடேசனால் தொடங்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இங்கு படிக்க வரும் மாணவ, மாணவியர், இளைஞர்களுக்கு எம்பி.யின் ஏற்பாட்டில் தன்னார்வலர்கள் உதவியுடன் தினமும் காலையில் மோரும், மாலையில் தேநீரும் இலவசமாக வழங்கப்படுகிறது.மேலும், இங்கு குடிநீர், கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு இதுபோல தமிழகம் முழுவதும் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

அத்துடன் தொகுதி மேம்பாட்டு நிதியில் மதுரை மாநகர், புறநகர் பகுதிகளில் அரசு நலத்திட்டங்கள் குறிப்பாக அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் சு.வெங்கடேசன் எம்.பி கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மருத்துவர் சரவணன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மருத்துவர் சரவணன்.

தமிழ்நாட்டில் திமுக ஆளுட்கட்சியாக இருந்தாலும் மதுரையில் உள்ள பத்து சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மதுரை மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று வலுவாகவே உள்ளது. இந்த முறை மதுரை மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மருத்துவர் சரவணன் களமிறங்குகிறார்.

மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியை எப்படியாவது பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மருத்துவர் சரவணன் செயல்பட்டு வருகிறார். தேர்தல் பிரச்சாரச் செலவைத் தான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ள அவர், வாக்காளர்கள், முகவர்கள், கட்சி அணியினருக்காக செலவை கட்சி ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியுடன் மகளிர் அணி நிர்வாகி ஏ.ஆர்.மகாலட்சுமி
பிரதமர் நரேந்திர மோடியுடன் மகளிர் அணி நிர்வாகி ஏ.ஆர்.மகாலட்சுமி

இந்த முறை மதுரை மக்களவை தொகுதியில் சிறு கட்சிகளின் கூட்டணியோடு பாஜக களமிறங்குகிறது. அதன் வேட்பாளராக பாஜக மகளிரணி மாநில தலைவர்களில் ஒருவரான ஏ.ஆர்.மகாலட்சுமி களமிறங்க கூடுதல் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை தெற்குத் தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமான அவர், மக்கள் நல உதவிகளைச்செய்து வருகிறார். அத்துடன் மதுரையில் உள்ள பெரும்பான்மையுள்ள சௌராஷ்டிரா வாக்கு வங்கியை குறிவைத்து இவர் பாஜக வேட்பாளராக களமிறங்க கூடுதல் வாய்ப்பு உள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

திருமாறன்
திருமாறன்

அத்துடன் தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி தலைவரான திருமாறனும் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். முக்குலத்தோர் வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்று அவர் கூறுவதால், பாஜக வேட்பாளர் பட்டியல் பரிசீலனையில் இவரும் உள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இதன்படி மதுரையில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக என மும்முனைப் போட்டி உறுதியாகி விட்டது. இரண்டு அமைச்சர்கள், மேயர், துணைமேயர், இந்தியா கூட்டணி என கூடுதல் பலம் கொண்ட திமுக அணி வலுவாக உள்ளதால், அதிமுக வலுவாக போராட வேண்டிய நிலையில் உள்ளது. அக்கட்சிக்கு எஸ்டிபிஐ உள்ளிட்ட சிறுகட்சிகள் ஆதரவு அளித்தாலும் மதுரையில் திமுக கூட்டணியே வலுவாக உள்ளது. இதன் காரணமாக மதுரையை மீண்டும் அந்த கூட்டணியே தக்க வைக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in