திராவிட மாடல் அரசியல் செய்கிறாரா சரவணன்?

மதுரை பாஜகவில் வெடிக்கும் சர்ச்சை!
சரவணன்
சரவணன்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மதுரை மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் பட்டியலில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இதைவைத்து மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணனுக்கு எதிராக பாஜகவுக்குள்ளேயே சிலர் பகை முடிகிறார்கள்.

சரவணன் பாஜகவில் இணைந்த போது...
சரவணன் பாஜகவில் இணைந்த போது...

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை திமுகவில் எம்எல்ஏ-வாக இருந்தவர் சரவணன். தேர்தலில் தனக்கு மீண்டும் சீட் இல்லை என்றதும் பாஜக பக்கம் பாய்ந்தார். வந்தவரை வாரி இழுத்துக் கொண்ட பாஜக, வந்த வேகத்தில் அவருக்கு சீட்டும் கொடுத்து அழகுபார்த்தது. அப்போதே சரவணனுக்கு எதிராக மதுரை பாஜகவுக்குள் கடும் புகைச்சல் கிளம்பியது. வழிவழியாக பாஜகவில் இருப்பவர்கள் தான் அப்படியான அதிருப்தியைக் கிளப்பினார்கள். ஆனாலும், சரவணனின் ஃபெமிலியாரிட்டியும், நிதி ஆதாரமும் தங்களுக்கு கூடுதல் பலம் கொடுக்கும் என நம்பியது பாஜக தலைமை. தேர்தலில் அது கைகொடுக்காமல் போனாலும் இப்போது அது நன்றாகவே கைகொடுக்கிறது. அதிமுகவினர்கூட பேசத் தயங்கும் விஷயங்களைப் பட்டென பொதுவெளியில் போட்டு உடைக்கிறார் சரவணன். இதனால், மதுரைக்குள் பாஜகவுக்கு முன்னைக்காட்டிலும் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. அண்ணாமலை ஸ்டைலில் சரவணன் செய்யும் திமுக எதிர்ப்பு அரசியலைப் பார்த்துவிட்டு அவரை மதுரை மாநகர் மாவட்ட தலைவராக்கியது பாஜக தலைமை.

அதிமுக முன்னாள் கவுன்சிலர் லட்சுமியை பாஜகவில் இணைத்த போது...
அதிமுக முன்னாள் கவுன்சிலர் லட்சுமியை பாஜகவில் இணைத்த போது...

மாவட்ட தலைவர் பொறுப்புக்கு வந்தது முதலே, மாற்றுக் கட்சியில் இருக்கும் மக்கள் அறிந்த முகங்களைப் பாஜகவுக்குள் இழுத்துப் போட ஆரம்பித்தார் சரவணன். இந்த இழுப்புக்கு கூட்டணி கட்சியினரான அதிமுகவினரும் தப்பவில்லை. இப்படி வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சரவணன் சார்ந்திருக்கும் முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இந்த நிலையில் தான் கட்சிப் பதவிகளையும் முக்குலத்தோருக்கே வாரி வழங்குவதாக சரவணனுக்கு எதிராக பாஜகவுக்குள்ளேயே சங்கு ஊதுகிறார்கள். சரவணன் தனது முக்குலத்தோர் சமூகத்தினருக்கே கட்சிக்குள் முக்கியத்துவம் கொடுப்பதால் நீண்ட காலமாக பாஜகவில் இருக்கும் மற்ற சமூகத்தினர் சற்றே எரிச்சலடைந்து கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்டாமல் விலகி நிற்பதாகச் சொல்கிறார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

இது குறித்து நம்மிடம் பேசிய மதுரை மாநகர் மாவட்ட பாஜகவினர் சிலர், "கடந்த காலங்களை விட தற்போது மதுரை மாவட்ட பாஜகவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித் திருப்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், இது சரவணனால் மட்டுமே வந்துவிடவில்லை. கட்சிப் பொறுப்பாளர்கள் தங்களது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள அவரவர் தகுதிக்கு ஏற்ப உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டதால் இந்த நிலை எட்டப்பட்டுள்ளது. ஆனால், இதெல்லாமே சரவணனால் தான் சாத்தியமானதாக சிலர் பில்ட் அப் கொடுக்கிறார்கள்.

டாக்டர் சரவணனைப் பொறுத்தவரை திமுக, மதிமுக என பல கட்சிகளில் பயணித்து வந்தவர். அந்தக் கட்சிகளில் அவர் படித்த அரசியலை பாஜகவில் புகுத்துகிறார். இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் திராவிட அரசியலை பாஜகவுக்குள் புகுத்த நினைக்கிறார். திமுகவும், அதிமுகவும் தான் முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால், பாஜக அப்படி அல்ல. இங்கே அனைத்து சமுதாயத்தினரும் இருப்பார்கள். இது வடநாட்டு கட்சி. இதில் சேர்ந்தால் நமக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது என்று சொல்லி முக்குலத்தோரில் பெரும் பகுதியினர் பாஜகவை அண்டாமல் இருந்த காலம் உண்டு. அப்போதெல்லாம் மற்ற சமூகத்தினர் தான் பாஜகவுக்காக கொடி தூக்கினார்கள். ஆனால், இப்போது பாஜகவுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் செல்வாக்கு வந்துவிட்டது என்பதால் திராவிடக் கட்சிகளுக்கு நிகராக பாஜகவுக்கும் முக்குலத்தோர் வருகிறார்கள். கட்சியில் உறுப்பினராக சேர வருபவர்களை வாழ்த்தி வரவேற்பது தவறில்லை. ஆனால், அப்படி வருபவர்களுக்கு அதிலும் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சரவணன் அதிமுக்கியத்துவம் கொடுப்பதைத்தான் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று சொன்னார்கள்

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து டாக்டர் சரவணனிடமே பேசினோம். சிரித்த முகத்துடன் நமது கேள்வியை எதிர்க்கொண்டவர், “திமுக, அதிமுகவில் முக்குலத்தோருக்கான பிரதிநிதித்துவம் குறைஞ்சிட்டு வருது. அதனாலேயே பலரும் பாஜகவுக்கு வராங்க. சாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டு தினமும் 50 முதல் 100 பேர் வரை இளைஞர்கள் பாஜகவில் சேருகின்றனர். இந்தியா முழுமைக்குமே மோடி என்ற மந்திரச் சொல் இளைஞர்களை பாஜகவை நோக்கி ஈர்க்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இளைஞரான அண்ணாமலை மாநில தலைவராக வந்த பிறகு கட்சி புது எழுச்சி கண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. மதுரையிலும் இதற்கு முன்பு மெதுவாகவே இருந்த பாஜகவின் வளர்ச்சியானது இப்போது வேகமெடுத்து வருகிறது. அதற்கு எங்களுடைய செயல்பாடுகளும் ஒரு காரணம். முக்குலத்தோர் மக்கள் என்னை அவர்களின் பிரதிநிதியாகப் பார்க்கிறார்கள். அதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அதுமட்டுமில்லாது, நான் ஒரு டாக்டர் என்பதாலும் அனைவராலும் எளிதில் அணுகக்கூடியவனாக இருக்கிறேன் என்பதாலும் மதுரை பாஜகவில் பலரும் சேர்கிறார்கள். திமுக உள்ளிட்ட கட்சிகள் சமூகநீதி என வெளியில் தான் சொல்லிக்கொள்கின்றன. ஆனால், உள்ளுக்குள் அந்த நீதி இல்லை. அங்கே அனைத்திலுமே கோட்டா சிஸ்டம் தான். தன்னைச் சந்திக்க வந்த திருமாவளவனை அமைச்சர் ராஜகண்ணப்பன் எப்படி நடத்தினார் என்பதை நாடே பார்த்தது. தனது மகளின் காதல் கலப்புத் திருமணத்தை அமைச்சர் சேகர்பாபுவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படி எல்லா கட்சியிலுமே சாதி அரசியல் என்பது தவிர்க்க முடியாததாக இருக்கும் போது பாஜக மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது. பாஜகவிலும் அத்தகைய அரசியல் இருப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in