`பிலாஸ்பூரில் திறப்பு விழா; மதுரை இன்னும் பொட்டல்காடு'- பிரதமரை விமர்சிக்கும் சு.வெங்கடேசன் எம்பி

`பிலாஸ்பூரில் திறப்பு விழா; மதுரை இன்னும் பொட்டல்காடு'- பிரதமரை விமர்சிக்கும் சு.வெங்கடேசன் எம்பி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார் சு.வெங்கடேசன் எம்பி.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூரில் அமைக்க பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி அடிக்கல் நாட்டினார். தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுவதற்காக 222 ஏக்கர் நிலம் மாநில அரசால் மத்திய சுகாதாரத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டு அந்த நிலத்தில் 90 சதவீத சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகள் முடிவடைந்துள்ளதோடு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் அடிக்கல் நாட்டிய இடத்தில் சுற்றுச் சுவர் மட்டும் எழுப்பப்பட்டு, கட்டுமான வேலைகள் எதுவும் தொடங்கப்படாமல் இன்றுவரை பரிதாபமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன என்றும் விரைவில் கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்றும் கூறினார். நட்டாவின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் கட்சியினரை பதறவைத்தது. இதையடுத்து, எய்ம்ஸ் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்ட மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர் "95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே" என்ற கேள்வியோடு பதாகை ஏந்தி நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சு.வெங்கடேசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், "பிரதமர் அவர்களே! 2018 ஆம் ஆண்டு தான் இரண்டும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பிலாஸ்பூருக்கு அக்டோபர் 5 திறப்பு விழா. மதுரை இன்னும் பொட்டலாக... "அர்பா" நதிக் கரைக்கு வழங்கப்படும் நீதி எங்கள் வைகை கரைக்கு மறுக்கப்படுவது ஏன்?.

"உண்மையாகவே 95 % பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக். 5-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர். அதே 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல்காடாகவே இருக்கிறது. அந்த பொட்டல்காட்டைக் காட்டி 95 சதவீதம் என்றால் என்ன? என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது. ஜே.பி.நட்டா சொன்ன 95 சதவீதப்பணி அவர் எம்எல்ஏவாக இருந்த பிலாஸ்பூரில் தான் நடந்துள்ளது என்பதை அண்ணாமலை அறிக" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in