மதுரை எய்ம்ஸ் பணி 95% முடிந்துவிட்டதா.. ஜே.பி.நட்டா சொன்னது பொய்யா?:- அம்பலப்படுத்திய தமிழக எம்பிக்கள்

மதுரை எய்ம்ஸ் பணி 95% முடிந்துவிட்டதா.. ஜே.பி.நட்டா சொன்னது பொய்யா?:- அம்பலப்படுத்திய தமிழக எம்பிக்கள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியிருந்த நிலையில், நேரிடையாகவே தோப்பூருக்கு சென்று எய்ம்ஸ் பணி குறித்து அம்பலப்படுத்தியுள்ளார் தமிழக எம்பிக்கள்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பல்வேறு போராட்டங்கள், தடைகளைக் கடந்து தோப்பூரில் அமைக்க பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி அடிக்கல் நாட்டினார். தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுவதற்காக 222 ஏக்கர் நிலம் மாநில அரசால் மத்திய சுகாதாரத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டு அந்த நிலத்தில் 90 சதவீத சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகள் முடிவடைந்துள்ளதோடு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் அடிக்கல் நாட்டிய இடத்தில் சுற்றுச் சுவர் மட்டும் எழுப்பப்பட்டு, கட்டுமான வேலைகள் எதுவும் தொடங்கப்படாமல் இன்றுவரை பரிதாபமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. கட்டுமான வேலையே தொடங்காத தோப்பூர் எய்ம்ஸுக்கு இயக்குநர் குழுவெல்லாம் அமைத்து கூட்டமெல்லாம் நடத்தி வருகிறார்கள். ஆனால், வேலை எப்போது தொடங்கும் என்பதுதான் தெரியவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்லின்போது எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்ட ஒற்றை செங்கலை எடுத்துச் சென்ற உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன. மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார்” என்றார். ஜே.பி.நட்டாவின் இந்த பேட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்திருந்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, "ஒரு செங்கல்லை மட்டும் யாரோ திருடன் கொண்டு போயிட்டான்" என்று பதிவிட்டிருந்தார்.

ஜே.பி.நட்டாவின் இந்த புதிய தகவல் மதுரை மக்களை அதிரவைத்துவிட்டது. இந்நிலையில், எய்ம்ஸ் கட்டுவதற்கான இடத்தை இன்று பார்வையிட்ட மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர் "95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே" என்ற கேள்வியோடு பதாகை ஏந்தி நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன், "உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை. ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை. அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம்" என்று விமர்சித்துள்ளார்.

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர் தோப்பூருக்கு நேரிடையாகவே சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சொன்ன பொய் தகவலை அம்பலப்படுத்தியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in