மதுரை எய்ம்ஸா, அதை அண்ணாமலையிடம் கேளுங்கள்: எஸ்கேப்பான ஜே.பி.நட்டா

மதுரை எய்ம்ஸா, அதை அண்ணாமலையிடம் கேளுங்கள்: எஸ்கேப்பான ஜே.பி.நட்டா

மதுரை எய்ம்ஸ் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அதை அண்ணாமலையிடம் கேளுங்கள் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நைஸாக நழுவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது. மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை தோப்பூரில் அமைக்க முடிவு செய்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி மதுரைக்கு நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். இதனால் அடுத்த 45 மாதங்களில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி நிறைவடையும், 2023-ல் எய்ம்ஸ் பயன்பாட்டுக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அடிக்கல் நாட்டப்பட்டு மூன்றரை ஆண்டுக்கு மேலாகியும் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடம் வெறும் சுற்றுச்சுவருடன் வானம் பார்த்த பூமியாக உள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு 2 நாள் சுற்றுப்பயணமாக மதுரை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பல்வேறு துறை நிபுணர்கள் மத்தியில், ‘மதுரை எய்ம்ஸ் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக’ பேசினார். நட்டாவின் இந்த பேச்சை தமிழக பாஜக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டது. பாஜக முக்கிய நிர்வாகிகள் தங்கள் சமூக வலைதள கணக்கில் மறு பகிர்வு செய்தனர்.

இந்நிலையில், சுற்றுச்சுவர் மட்டும் உள்ள நிலையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி 95 சதவீதம் நிறைவடைந்து இருப்பதாக ஜே.பி.நட்டா பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது. விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஆகியோர் கட்சியினருடன் தோப்பூருக்கே நேரில் சென்று, ‘எங்கே நட்டா சொன்ன அந்த 95 சதவீத பணி?’ எனக் கேட்டு சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டனர். இந்த பதிவுகளை திமுகவினர் உடனுக்குடன் சமூக வலை தளங்களில் பரப்பினர்.

இதையடுத்து, ‘மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான பூர்வாங்க பணிகள் தான் 95 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் கட்டுமானப் பணி தொடங்கும்’ என்றே ஜே.பி.நட்டா பேசினார். நட்டாவின் பேச்சை திமுக உள்ளிட்ட கட்சிகள் தவறாக புரிந்து கொண்டு விமர்சனம் செய்து வருகின்றன’ என பாஜகவினர் விளக்கம் அளித்தனர். அவர்கள் அளித்த விளக்கத்திற்கு பின்பும் விமர்சனம் தொடர்ந்ததால், பாஜக சமூக வலைதள பக்கங்களிலிருந்து நட்டாவின் பேச்சு நீக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை காரைக்குடியில் நட்டாவிடமே செய்தியாளர்களிடம் கேட்டனர். அதற்கு அவர், ‘எய்ம்ஸ் தொடர்பாக அண்ணாமலையிடம் கேளுங்கள்’ கைகாட்டி விட்டு அகன்றுவிட்டார். தமிழக சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நட்டா டெல்லி சென்று விட்ட போதிலும், அவரது பேச்சின் மீதான விமர்சனம் ஓயவில்லை. திமுகவினர் சுற்றுலா செல்வது போல் தோப்பூருக்கு சென்று எய்ம்ஸ் சுற்றுச்சுவரை படம்பிடித்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in