திமுக எம்பி ஆ.ராசா குறித்து கேள்வி: செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்த மதுரை ஆதீனம்!

திமுக எம்பி ஆ.ராசா குறித்து கேள்வி: செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்த மதுரை ஆதீனம்!

திமுக எம்பி ஆ.ராசா குறித்த கேள்விக்கு மதுரை ஆதீனம் பதில் அளிக்காமல் செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பு சலசலப்புடன் முடிந்தது.

சென்னை வேப்பேரியில் கடந்த 6-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா, இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் தெரிவித்த சில கருத்துகள் பெரும் சர்ச்சையானது.

ராசாவைக் கண்டித்து பாஜக, இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் மதுரை ஆதீனம் இதுவிஷயமாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசை மதுரை ஆதீனம் கடுமையாக விமர்சித்தார். "இந்து கோயில்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும். கோயில்களுக்குள் அரசியல் புகுந்துவிட்டது. அரசியல்வாதிகள் கோயில்களில் தக்கார்களாக உள்ளனர். அரசியல்வாதிகளின் கொள்ளைக்கூடாரமாக கோவில்கள் மாறிவருகிறது" என்று அறநிலையத்துறையைக் கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு, "மதுரை ஆதினம் தொடர்ந்து இதுபோல் பேசி வந்தால், பதில் சொல்ல பல வகைகள் இருக்கின்றன என்பதை அடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறேன்" என்று எச்சரித்தார்.

இந்நிலையில், திமுக எம்பி ஆ.ராசா குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டார் மதுரை ஆதீனம். விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை அவர் நடத்தினார். அப்போது, செய்தியாளர் ஒருவர், “இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?” என்று கேள்வி கேட்டார். “சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்று ஆதீனம் பதில் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தனர். “இந்து அமைப்பில் இருக்கீங்க, ஆதீனமாக பொறுப்பேற்றுள்ளீர்கள். இப்படி பதில் சொல்லாமல் இருந்தால் எப்படி?” என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, “வம்பை நீங்க விலைக்கு வாங்குறீங்க” என்று கோபமாக பதில் அளித்தார் ஆதீனம்.

“நீங்கள் அழைத்துதான் நாங்கள் வந்தோம்” என்று கூறிய செய்தியாளர்கள் தொடர் கேள்விகளை எழுப்பினர். “நான் உங்களை அழைத்தேனா?” என்று ஆதீனம் ஆவேசத்துடன் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்வியால் ஆதீனம் கோபத்துடன் எழுந்து சென்றுவிட்டார். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பு சலசலப்புடன் முடிந்தது.

அண்மைக் காலமாக தமிழக அரசுக்கு எதிராக பேசி வந்த மதுரை ஆதீனம் தற்போது ஏன் அடக்கி வாசிக்கிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in