உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்; ஓபிஎஸ் தரப்பு அவசர‌ முறையீடு: உயர்நீதிமன்றம் நாளை தடை விதிக்குமா?

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்; ஓபிஎஸ் தரப்பு அவசர‌ முறையீடு: உயர்நீதிமன்றம் நாளை தடை விதிக்குமா?

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் மற்றும்  வைத்தியலிங்கம்,  ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த  உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இரட்டை தலைமையை ஒழித்து ஒற்றைத் தலைமை உருவாக்கிய  தீர்மானத்தை ரத்து செய்யக்கோரிய உரிமையியல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பொது செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டுமென மனோஜ் பாண்டியன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

இந்த அவசர முறையீட்டை ஏற்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, இந்த அவசர மனுவை  நீதிபதி கே.குமரேஷ்பாபு நாளை விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். இதன்படி மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ள மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்பாக நாளை காலை 10 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in