அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசும், காவல்துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்துள்ள மனுவில்," ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக அளித்த புகாரில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கும் ஏற்பட்ட தகராறால், இரு தரப்பினருக்கும் சுவாதீன பிரச்சினை இருந்ததாகவும்,அதன்படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கபட்டது. ஆனால் அவ்வாறு எந்த பிரச்சினையும் இல்லை. அந்த சீலை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அதிமுக அலுவலகத்திற்குள் நாங்கள் சென்றபோது, அலுவலகத்தை திறந்து பார்த்த போது சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காணவில்லை.

ஜூலை 11-ல் புகுந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராஜம் புகார் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட ராயப்பேட்டை காவல் நிலையத்தினர், ஒப்புகைச் சீட்டு கூட வழங்கவில்லை. உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட பிறகே புகாரை பெற்றதற்கான சான்று கிடைக்கப்பெற்றது.

ஜூலை 23-ம் தேதி புகார் அளித்தும், புகாரை காவல்துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருவதால், புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி அதிமுக அலுவலகத்தில் உள்ள் பொருட்கள் மாயமானது குறித்த புகாரில் சென்னை காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்பதால், வழக்கை வேறு அமைப்பிற்கு மாற்ற வேண்டுமென வாதிட்டார்.

அதன்பின்னர் சி வி.சண்முகம் புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in