ஓராண்டுக்கும் மேலான இடைவெளியில் மதன் ரவிச்சந்திரன் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். இம்முறை ’ஸ்டிங் மேளா’ என்ற பெயரில் அரசியல் மற்றும் ஊடக புள்ளிகள் பலரின் வயிற்றில் புளி கரைக்கும் வீடியோக்களை பந்தி வைத்திருக்கிறார்.
ஊடகவியலாளராக தமிழகத்தில் அறிமுகமானவர் மதன் ரவிச்சந்திரன். மரபான ஊடகங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அதிரடி பாணி அவருடையது. எடக்குமடக்கு கேள்விகளால் எதிர் தரப்பினரை நிலைகுலையச் செய்வதில் வித்தகர். அவரின் போக்கே அவருக்கு எதிரிகளை சம்பாதித்து தர, அவற்றை எதிர்கொள்ள தனக்கான பின்புலத்தை வலுவாக்கவும் முயன்றார்.
பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி விலகியவர், அண்ணாமலை ஆசியோடு பாஜகவில் இணைந்தார். அப்போதுதான், ஸ்டிங் ஆபரேஷன், ஹனி ட்ராபிங் என ஆடியோ, வீடியோ பதிவுகள் வெளியாக ஆரம்பித்தன. முக்கியமாக கே.டி.ராகவன் சிக்கிய சம்பவத்தில் மதன் ரவிச்சந்திரன் முக்கிய கண்ணியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து அண்ணாமலையுடனான கருத்து வேறுபாட்டில் அங்கிருந்து விலகியவர் ஓராண்டுக்கும் மேலாக அமைதி காத்தார். தற்போது ’மார்ஸ் தமிழ்நாடு’ என்ற யூடியூப் சானலுடன் மீண்டு வந்திருக்கிறார். எழுத்தாளர் வெண்பா கீதாயன் உடன் சேர்ந்து மதன் ரவிச்சந்திரன் அளவளாவும் இந்த வீடியோக்களில், பல அரசியல் மற்றும் ஊடக புள்ளிகள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஒரு நாளில் மட்டும், இந்த செய்தி வலையேறும் வரை 4 வீடியோக்களை வெளியிட்டிருக்கும் மதன் ரவிச்சந்திரன் - வெண்பா கீதாயன் தரப்பு, தங்களது ஸ்டிங் மேளா குறித்து அந்த வீடியோக்களில் விரிவாக விவாதிக்கிறது. மதன் ரவிச்சந்திரனும் தன்னிலை விளக்கமாக, பாஜகவில் சேர்ந்தது, அண்ணாமலையுடனான அனுபவங்கள், கே.டி.ராகவன் உள்ளிட்ட விவகாரங்கள்.. அவற்றின் பின்னணி எனப் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். அவர்கள் பேசுவதை பார்க்கும்போது, இந்த வீடியோக்கள் அனைத்தும் ட்ரெய்லராகவே தென்படுகின்றன.
4 வீடியோக்களில் 2 வீடியோக்கள் தலா ஒரு மணி நேரத்துக்கும், அடுத்த 2 வீடியோக்களும் தலா சுமார் அரை மணி நேரத்துக்கும் நீள்கின்றன. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, கே.டி.ராகவன், ராகவன் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட மலர்கொடி கமிஷன், அண்ணாமலைக்கு அனைத்துமான அமர் பிரசாத் ரெட்டி, பாஜகவில் இல்லாதபோதும் அண்ணாமலையின் ஆசிகளோடு வலம் வரும் திருச்சி சூர்யா சிவா, இவர்களுடன் தனியார் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் தளங்களின் வாயிலாக வெகுமக்களுக்கு அறிமுகமான சிலர் என ஏராளமானோர் தலைகள் உருள்கின்றன. இன்னும் எத்தனை வீடியோக்கள் வெளியாகப் போகின்றன, அவை எவரையெல்லாம் குறிவைத்திருக்கின்றன, அவற்றின் உண்மைத் தன்மை என்ன, குற்றச்சாட்டுக்கு ஆளானோரின் தரப்பு விளக்கம் என்ன என்பதெல்லாம் இனிமேல்தான் வெளிப்பட உள்ளன.