
சென்னை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் அருகே உள்ள மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக வெங்கடேசன் என்பவர் பதவி வகித்து வந்தார். நேற்று இரவு இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதைத்தொடர்ந்து ராகவேந்திரா நகர் பாலம் அருகே வெங்கடேசன் வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த கும்பல் வந்து வெங்கடேசன் மீது பெட்ரோல் குண்டுகளை முதலில் வீசி இருக்கிறது. இதில் பலத்த காயமடைந்து கீழே விழுந்த வெங்கடேசனை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். மாடம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் விலகி வருவதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.