`பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்'- நேரில் சென்று குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்!

`பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்'- நேரில் சென்று குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா(17) வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாகக் கடந்த மாதம் 28-ம் தேதி பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் ஆகியோர் மாணவி பிரியாவுக்கு முட்டியில் சவ்வு அறுவை சிகிச்சை செய்தனர். இதன் பின் பிரியாவின் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கால்கள் அகற்றப்பட்ட நிலையில் கடந்த 15-ம் தேதி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகத் தவறான சிகிச்சை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து சுகாதாரத்துறை தரப்பிலும், காவல்துறையினர் தரப்பிலும் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை பிரியாவின் வீட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றிருந்தார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் சென்றிருந்தனர். அப்போது பிரியாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பின்பு நிவாரணத் தொகை, பிரியாவின் சகோதரர் ஒருவருக்கு அரசுப் பணி ஆணை உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம். ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும், நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் பிரியாவின் உயிர்க்கு ஈடாகாது'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in