லுலு மால்: புரிதல் இல்லாமல் பேசுகிறாரா அண்ணாமலை?

லுலு மால்: புரிதல் இல்லாமல் பேசுகிறாரா அண்ணாமலை?
அண்ணாமலை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்தின் போது, தமிழகத்தில் முதலீடு செய்ய லுலு நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இதனால் சாலையோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், லுலு நிறுவனத்திற்காக தமிழகத்தில் ஒரு செங்கலைக்கூட எடுத்துவைக்க முடியாது எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆனால் இவரது பேச்சு புரிதல் இல்லாமல் வெளிப்பட்டுவருவதாக சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

மணமக்களுடன் சுரேந்திரன், யூசூப் அலி,மம்முட்டி
மணமக்களுடன் சுரேந்திரன், யூசூப் அலி,மம்முட்டி

உலக அளவில் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான லுலு மார்ட்டின் உரிமையாளர் யூசூப் அலி. இவர், தொழிலையும் தாண்டி மனித நேய அடிப்படையில் பல நற்பணிகளையும் செய்து வருபவர். அதுமட்டும் இல்லாமல் லுலு நிறுவனத்தின் வழியே எளியோருக்கும் நேசக்கரம் நீட்டிவருகிறார். பாஜக ஆளும் மாநிலங்களிலேயே லுலு மார்ட் நிறுவனம் துவங்க பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் அண்ணாமலை அதற்கு எதிராகப் பேசுவதே சர்ச்சைக்கு தூபம் போட்டுள்ளது.

இதுகுறித்து காமதேனு இணையத்திடம் பேசிய எழுத்தாளர் குளச்சல் அசீம், “கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனின் மகன் திருமணம் அண்மையில் முன்பு நடைபெற்றது. நம் தமிழக பாஜக பிரமுகர்கள் அனைவருமே கலந்துகொண்டனர். அதில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவரே யூசூப் அலிதான். யூசூப் அலியோடு ஆரத்தழுவி மேடையில் நின்று புகைப்படம் எடுத்திருந்தார் கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன். இதில் மம்முட்டியும் கலந்திருந்தார். லுலு மாலில் ஆயிரக்கணக்கான உள்ளூர் தொழிலாளர்கள் தான் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்னும் அடிப்படைப் புரிதலும் அண்ணாமலைக்கு இல்லை. லுலு மால் திருவனந்தபுரத்தில் அண்மையில் திறக்கப்பட்டது. அங்கு 2000 சதுர அடி இடம் சிறுதொழிலாளர்களுக்கு, அதாவது குடிசைத் தொழிலாக அப்பளம், ஊறுகாய் தயாரிப்பவர்கள் தொடங்கி, இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கான சந்தைவாய்ப்புவரை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த 2000 சதுர அடி இடம் உள்ளூர் சந்தைக்கானது. அதற்கு வாடகைக் கூட வாங்குவதில்லை.

பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் லுலு மாலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அங்கு யோகி ஆதித்யநாத் தான் இந்த மால் கொண்டுவர முழுமுயற்சி செய்து அடிக்கலுக்கும் காரணமாக இருந்தார். பிரதமர் நரேந்திர மோடியே, வாரணாசியில் லுலு மால் வேண்டும் என கேட்டிருக்கிறார். அதற்கான வரைபடத்தயாரிப்பும் நடந்துவருகிறது. வெறும் வெறுப்பு அரசியலை மட்டும் முன்வைத்து லுலுவுக்கு எதிராக அண்ணாமலை கோஷமிடத் தொடங்கியிருப்பது நகைக்கும்படியே உள்ளது.

அண்ணாமலை விரும்பினால் திருவனந்தபுரத்தில் உள்ள லுலு மாலுக்குப் போய், எத்தனை விளிம்புநிலை மக்கள் வேலைவாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள் எனவும் பார்வையிடலாம். வெறுப்பு அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, அரசியலை மக்களுக்காக மேற்கொள்ளவேண்டும். வெறுப்பு அரசியல் மக்களின் வளர்ச்சிக்கும் வேட்டு வைத்துவிடும்” என்றார்.

Related Stories

No stories found.