எங்கள நகர்த்திட்டு மந்திரி ஆகுறதுக்கு நிறையப் பேர் பின்னால நிக்கிறாங்க!

திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
கூட்டத்தில் பேசும் நேரு...
கூட்டத்தில் பேசும் நேரு...

“எங்கள நகர்த்திட்டு மந்திரி ஆகுறதுக்கு நிறையப் பேர் பின்னால நிக்கிறாங்க. அதனால நாங்க வேலை செஞ்சுக்கிட்டே தான் இருக்கணும்; நீங்க நினைக்கிற மாதிரி, அமைச்சர் பதவியில நாங்க சும்மா சொகுசா உட்காந்திருக்க முடியாது” நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தான், நேற்று நடந்த திருச்சி மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் இப்படிப் பேசி இருக்கிறார்.

திருச்சியில் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து வளாகம் அமையவிருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நலத்திட்டப் பணிகளைக் துவக்கி வைப்பதற்காக டிசம்பர் 30-ம் தேதி திருச்சி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தை திருச்சியிலுள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நேற்று நடத்தினார் அமைச்சர் நேரு.

திருச்சி மத்தி மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் பல விஷயங்களை பகிரங்கமாக மனம்விட்டுப் பேசினார் நேரு. “ஒருங்கிணைந்த பேருந்து வளாகம் அமைவதால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 ஆயிரம் பேருக்கு பிழைப்புக்கு வழிகிடைக்கும்” என்று சொன்ன நேரு, “திருச்சிய எடுத்துக்கிட்டீங்கன்னா... கடந்த 10 வருஷ அதிமுக ஆட்சியில, வழியா ஒரு ரோடு போடல, கட்டிடம் கட்டல, எந்த இடத்துலயும் தூர்வாரக்கூட இல்லை. ஆனாலும், அந்த ஆட்சிய மக்கள் குறை சொல்லல. நம்ம ஆட்சிக்கு வந்ததுல இருந்து அத்தனை வேலையும் பார்க்கிறோம். ஆனா மக்கள், நம்மைத் தான் கேள்வி கேக்குறாங்க.

பட்டா குடுக்கலைன்னு சொன்னா, ’எய்ய்... பட்டாவைக் குடுய்யா’ன்னு கேக்குறாங்க. ஏன்னா, இவங்கட்ட கேட்டா தான் வேலை நடக்கும்னு மக்களுக்குத் தெரியுது. அந்த நம்பிக்கை அதிமுககாரங்க மேல மக்களுக்கு இல்லை. அதனாலதான் அதிமுக அமைச்சர்கள் எல்லாம் ஜாலியா இருந்தாங்க. ஆனா, நாங்க அப்படி இருந்தா எங்களை தளபதி பிதுக்கிட்டு விட்டுருவாரு. எங்கள நகர்த்திட்டு மந்திரி ஆகுறதுக்கு நிறையப் பேர் பின்னால நிக்கிறாங்க. அதனால நாங்க வேலை செஞ்சுக்கிட்டே தான் இருக்கணும். நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் அமைச்சர் பதவியில நாங்க சும்மா சொகுசா உட்கார்ந்திருக்க முடியாது.

தமிழகத்துல சிறப்பான ஆட்சிய தளபதி வழங்கிட்டு இருக்காரு. இப்பெல்லாம் நேரடியா இன்டர்வியூவ் வெச்சு மதிப்பெண் அடிப்படையில தான் அரசு வேலைக்கு ஆள் எடுக்கிறாங்க. அதனால நம்மாளுங்க புள்ளைங்களுக்கு வேலை வாங்கமுடியல. வருத்தமா தான் இருக்கு. கொஞ்சம் பொறுங்க. ஒரு நேரம் வரும். கரெக்டா அந்த வேலையை முடிப்போம்” என்று பேசி திமுகவினரை உற்சாகப்படுத்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in