‘10 நாளில் மணல் குவாரிகளை திறக்காது போனால்...’ காலக்கெடுவுடன் எச்சரிக்கை விடுத்த லாரி உரிமையாளர்கள்

மணல் குவாரி (கோப்பு படம்)
மணல் குவாரி (கோப்பு படம்)

தமிழ்நாட்டில் 10 நாட்களுக்குள் மணல் குவாரிகளை திறக்கவில்லையெனில் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் செயலாளர் கண்ணையன் தலைமையில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கண்ணையன், “தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் எம்.சாண்ட் கிரஷர் உரிமையாளர்கள், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளனர். தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 4,440 எம்.சாண்ட் குவாரிகளில், 4000 குவாரிகள் ஆவணங்கள் ஏதும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றது” என்றார்.

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம்
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம்

கடந்த 90 நாட்களில் எம்.சாண்ட் விலை யூனிட்டுக்கு ரூ.1,500 உயர்ந்துள்ளது. எம்.சாண்ட் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு முழுவதும் கிரஷர் உரிமத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசே கிரஷர்களை நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் 10 நாட்களுக்குள் போர்க்கால அடிப்படையில் மணல் குவாரிகளை தமிழ்நாடு அரசு திறக்க வேண்டும். இல்லை எனில் லாரிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறுத்துவோம். மேலும் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி ஒப்படைப்போம்” என்றார்.

சேலம் மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கண்ணையன்
சேலம் மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கண்ணையன்

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மணல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ள வீட்டின் உரிமையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதே போல், டெண்டர் எடுத்து அரசுப்பணிகள் செய்வோரும் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு கட்டுமானங்களும் தாமதமாகி வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திடீர் போராட்டத்தை அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in