முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்?
ராஜேந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்?

கைது நடவடிக்கையில் காவல் துறை தீவிரம்

பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்க, காவல் துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகாரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 17-ம் தேதி அவரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி கடந்த 17-ம் தேதி முதல் தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல் துறை தெரிவித்துள்ளது.

தலைமறைவாகியுள்ள அவரைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெங்களூரு, சென்னை, கேரளா, திருப்பதி, புதுச்சேரி போன்ற பல்வேறு பகுதிகளில் போலீஸார் தேடிவருகின்றனர். இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று(டிச.22) மீண்டும் ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ‘எனது வழக்கை சட்ட ரீதியாக சந்தித்து வருகிறேன். காவல் துறையினர் எனது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், கட்சி நண்பர்கள் ஆகியோரை தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். இதுபோன்று செய்யக் கூடாது என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையும் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அதைக் கருத்தில் கொள்ளவில்லை. அதனால் தற்போது இருக்கும் சூழலை கருத்தில் கொண்டு, முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உடனடியாக சிறப்பு அமர்வை நியமித்து விரைவாக உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க, இன்று லுக்அவுட் நோட்டீஸ் வழங்க காவல் துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டால், அதன் நகல் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் காவல் துறை அனுப்பிவைக்கும். இதன்மூலம், குற்றம்சாட்டப்பட்டவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயன்றால், அவரை விமான நிலைய காவல் துறையினர் எளிதில் கைது செய்ய முடியும்.

Related Stories

No stories found.