ஊருக்கு ஊர் கிளம்பும் லோ பட்ஜெட் பி.கே-க்கள்!

உள்ளாட்சித் தேர்தலை முன்வைத்து நடக்கும் உட்டாலக்கடி ‘வியூகங்கள்’!
ஊருக்கு ஊர் கிளம்பும் லோ பட்ஜெட் பி.கே-க்கள்!
ஓவியம்: முத்து

ஊரை ரெண்டாக்காம, பங்காளியைப் பகையாளியாக்க முடியாம, பாசக்கார நண்பனைப் பரம்பரை எதிரியாக்காம விட்டுப்போன ஊராட்சிகளுக்கும் இதோ வந்துவிட்டது ஊரக உள்ளாட்சித் தேர்தல். இந்தத் தேர்தலைக் குறிவைத்து ஊருக்கு ஊர் அதிரி புதிரி வியூக வகுப்பாளர்களும் கிளம்பியிருக்கிறார்கள். அதாகப்பட்டது 'லோ பட்ஜெட் பிரசாந்த் கிஷோர்கள்'!

தேர்தல் அறிவிப்பை வேட்பாளர்களைவிடவும் ஆர்வமாக எதிர்பார்த்தது இவர்கள்தான். ஐ-பேக் டீமே அசந்துபோகும் அளவுக்கு இவர்கள் வகுக்கும் வியூகம் இருக்கும். ஊரில் பசையுள்ள பார்ட்டிகளின் வீடுகளுக்குப் படையெடுத்து, "என்ன சீனிப்பாண்டி... தேர்தல் வரப்போகுது. ஊருக்குள்ள பெரிய தலை நீங்கதான்... நீங்க போட்டியிட்டாத்தான நம்ம ஊருக்கே ஒரு கவுரத..." என்று நைசாகத் தூபம் போடுவார்கள்.

பதிலுக்குக் குழப்பமான புன்னகையோ, கூச்சச் சிரிப்போ வந்துவிட்டால் போதும், “இந்தவாட்டி நம்ம ஊரு பொதுத்தொகுதிதான்னு சொல்லிட்டாங்க. அக்கா கூட வேணாம். நீங்களே போட்டியிடலாம். நீங்க சரின்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்க, மிச்சத்தப் பூராம் நானே பார்த்துக்கிறேன்" என்று முகத்தில் மஞ்சள் தண்ணீர் தெளிப்பார்கள். ஆடு தலையாட்டிவிட்டால்... பிரியாணி கன்ஃபர்ம்!

நம்மாளு போய் சீனிப்பாண்டி மண்டையக் கழுவிட்டு வந்த மறுநாளே, மேற்கொண்டு நாலு பேரு அந்தப் பசையுள்ள மனுஷனைப் போய்ப் பார்ப்பாங்க. "என்ன மாமா... நேத்து நம்ம பெரியகண்ணு (சுருக்கமா... பி.கே!) உங்களத் தேடி வந்து பார்த்தாராமே, கையக் குடுங்க... அப்ப நீங்கதான் அடுத்த பிரெசிடென்டு. ஏற்கெனவே நம்ம கோட்டைச்சாமிய 8-வது வார்டுக்கு மெம்பர் ஆக்குனது அவர்தான். குமாரு பொண்டாட்டி வளர்மதியை, அடுத்த சாதிக்காரங்க தெருவுலேயே ஜெயிக்க வெச்சவரும் அவர்தான். ரெண்டு பெருந்தலைகள் போட்டிபோட்ட போன தேர்தல்ல அப்பிராணியான ஆவுடையம்மாளை பஞ்சாயத்துத் தலைவராக்குனதும் அவர்தான... அந்தாளு சும்மா வந்து உங்களப் பார்த்திருக்க மாட்டாரு. எதாவது காரணம் இருக்கும். அவர் தேர்தல்ல நிக்கச் சொன்னா தயங்காம நில்லுங்க. எங்க பாக்கெட்லேயும் பத்து அம்பது ஓட்டு இருக்கு. மொத்தமா போட வெச்சிடலாம்"னு சொல்லுவாய்ங்க.

அதுக்குப் பிறகு, அந்த ஊர் ஐ-பேக் டீம் மொத்தமும் சீனிப்பாண்டி வீட்டுத் திண்ணையே கதின்னு செட்டில் ஆகிடும். காலையில பல் வௌக்குறதுல ஆரம்பிச்சி, காப்பித்தண்ணி, டிபன், மத்தியான விருந்து, ராத்திரி சரக்கு வரைக்கும் அங்கேதான். வியூக வகுப்பாளர்கள்னா சும்மாவா? "சீனிப்பாண்டி, நீ வடக்குத் தெருவுல ஏதோ வம்பு இழுத்து வெச்சிருக்கிற போல. அவிய்ங்கள சரிக்கட்டுறதுதான் பெரிய வேல. அந்த ஏரியாவுக்குக் கொஞ்சம் கூடுதலாச் செலவாகும்" என்று பெரிய அமவுன்ட்டுக்கு 'பில்' போடும் பெரியகண்ணு (பி.கே) டீம். அதுமட்டுமா? சின்னத்தைப் பிரபலப்படுத்துறேன்னு சொல்லி, வீட்டுக்கு வீடு சீப்பு, பூட்டு, விளக்குமாறு, டார்ச்லைட் கொடுக்க ஹோல்சேல் ரேட்ல வாங்கித்தாரேன்னு சொல்லி பெரிய அமவுன்ட்ட ஆட்டையப் போட்டுடுவா(ய்)ங்க.

ஒருத்தன் தேர்தல்ல போட்டியிடப் போறது கன்ஃபர்ம் ஆகிடுச்சுன்னு வைங்க, அவனோட நடை உடை பாவனை எல்லாமே மாறிடும். மனிதநேயச் செம்மலாக, வாரி வழங்கும் வள்ளலாக, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் வள்ளலாராக நடிக்க ஆரம்பிச்சிடுவான்.

"ச்சே... நம்மூரு பஸ் ஸ்டாப்ல ஒழுங்கா டவுன் பஸ்ஸை நிறுத்துறானா பாரு? வண்டியை நிறுத்தி ஆள் ஏத்துறதுதான அவன் வேலையே... பெரிய ஏரோப்ளேன் ஓட்டுறதா நினைப்பு" என்று என்னமோ இன்னிக்கு காலையில இருந்துதான் இந்த அநீதி நடப்பது போல பொங்குவார்கள்.

"நடுத்தெருவுல சாக்கடை ஓடுது. ச்சே... மனுச மக்க நடமாட முடியுதா? சீக்கிரமே இந்தத் தெருவுக்கு சிமென்ட் ரோடு போட்டுறணுமப்பா..." என்று நாலு தெருவுக்குக் கேட்கிற மாதிரி சத்தமாகப் பேசுவார்கள்.

ரியலான ரியல் எஸ்டேட் புரோக்கர்களே அசந்துபோற மாதிரி, "இந்தத் தெருவுக்கு சீக்கிரமே நல்ல தண்ணி குழாய் வந்திடும், தார் ரோடு வந்திடும், இந்த ஏரியாவே டவுன் மாதிரி மாறப்போகுது பாருங்க"னு வஞ்சனை இல்லாம வாய்க்கு வந்ததை எல்லாம் அடிச்சி விடுவாங்க.

பிரசிடென்ட்டுக்கு நிற்கிறவன் நினைப்பான், கிராமத்து ஜனங்க எல்லாம் வெகுளிங்கன்னு. வினையம், வில்லங்கம்னு எல்லாத்துலேயும் கரை கண்டவங்க கிராமத்தான்ங்கங்கிறது தேர்தல் நெருக்கத்துலதான் தெரியும். முன்னப் பின்ன பேசிக்கிடாதவங்ககூட வீடு தேடி வந்து கடன் கேட்பாங்க. கொடுக்காட்டி, "உதவி செய்ற மனப்பான்மை இல்லாதவன், காக்காயைக்கூட ஈரக் கையில விரட்டாத கஞ்சன்"னு ஊரெல்லாம் சொல்லி ஓட்டைக் காலி பண்ணிடுவானேன்னு, கேட்ட பணத்துல பாதியையாவது கொடுத்து அனுப்ப வேண்டியதிருக்கும்.

ஒருத்தனுக்குக் கடன் கிடைச்ச தகவல் தெரிஞ்சாப் போதும், வார்டுல இருக்கிற வாலிபப் பசங்கள்ல ஆரம்பிச்சு வயசாளிகள் வரைக்கும் வரிசை கட்டி வந்திடுவாங்க. ஒரு படத்துல குழந்தைக்குப் பேரு வெச்சி கவுண்டமணி 200 ரூவா மொய் எழுதுனதும், காலேஜுக்குப் போற பிள்ளைங்கள எல்லாம் தூக்கிக்கிட்டு அவர் வீட்டு முன்னாடி வரிசையில நிப்பாங்களே ஜனங்க... அந்த மாதிரி.

பிரசிடென்ட்டுக்கு நிற்கிறவன் யாரையும் பகைச்சுக்கக் கூடாது. பணம் கேட்கிறவன் ஒண்ணாம் நம்பர் திருட்டுப் பயன்னு தெரிஞ்சாலும், தர முடியாது போடான்னு முகத்துக்கு நேரா சொல்லிடவும் கூடாது. வெட்கம், மானம், கூச்ச நாச்சம் இல்லாம வீட்டு வாசல்ல வரிசையில நின்னு குடிக்க காசு கேட்பானுங்க. கொடுக்காட்டி எதிரி வீட்ல போய் குடிச்சிட்டு நம்மளத் திட்டுவானேங்கிற பயம் வேற வரும். எல்லாத்தையும் சமாளிக்கணும். இதுக்கெல்லாம் உள்ளூர் பி.கே டீம் கொஞ்சம் உதவும். என்ன ஒண்ணு, கொஞ்சம்... இல்லல்ல எக்கச்சக்கமா செலவாகும்!

இந்த பி.கே டீம், பணக்காரங்களை மட்டும் தேடிப் பிடிச்சி மண்டையில மொளகா அரைச்சாப் பரவாயில்ல. குடிக்க கஞ்சியில்லாம ஊரைவிட்டு ஓடிப்போய், ஓட்டல்ல வேலைபார்த்த குப்பன், சுப்பனோட மகன் நல்லாப் படிச்சி பெங்களூருலயோ, அமெரிக்காவுலேயோ நல்ல வேலையில இருப்பான். இக்கரைக்கு அக்கரை பச்சைங்கிற மாதிரி, அங்கிருந்துக்கிட்டே ஆபீஸ் நேரத்துலகூட அநியாயத்துக்கு ஊர்ப் புகழ் பாடுவான். அவனை ஃபேஸ்புக் வழியாப் பிடிச்சி, "தம்பி ஊர்ப்பாசத்துல உங்கள மிஞ்ச உலகத்துலேயே ஆளில்ல. நீங்க தான் நம்ம ஊரைக் காப்பாத்தணும். இந்த மண்ணை மாத்தணும். உள்ளாட்சித் தேர்தல் வந்திடுச்சி. உடனே ஓடியாங்க... நீங்க வந்தா மட்டும் போதும். மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்குவோம்" னு பக்கம் பக்கமா டயலாக் பேசுவாங்க. அந்த ஆடும் அதை உண்மைன்னு நம்பி, லட்ச ரூபா சம்பளத்தை விட்டுட்டு வண்டி பிடிச்சு வாகா ஊருக்கு வந்து சேரும்.

அப்புறம் என்ன... இருக்கிறத எல்லாம் உருவிட்டு கடைசியில, "தம்பி நானும் நீயும் நினைக்கிற மாதிரி நம்ம ஊரும் இல்ல, ஜனங்களும் நல்லவங்க இல்ல. நீ பழையபடி அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி"ன்னு கம்பி நீட்டிடுவானுங்க. சிவாஜிகிட்டையாவது கையில ஒத்த ரூபா காயின் தருவாங்க. இவிய்ங்க அதையும் பிடுங்கிடுவாய்ங்க.

ஒவ்வொரு ஊர்லேயும் ஒரு பெருசு இருக்கும். அவங்க குடும்பச் சொத்த பள்ளிக்கூடத்துக்கும், பஸ் ஸ்டாண்டுக்கும் கொடுத்திருப்பாங்க. அவங்க வம்சாவளியில ஒருத்தன் தேர்தல்ல நின்னா, வள்ளல் பரம்பரையின் வாரிசு, குடுக்கிறதுக்குன்னே பிறந்த குடும்பம்னு வாயார வாழ்த்துற மக்கள், தேர்தலுக்கு முந்தைய ராத்திரியில எவன் ஓட்டுக்கு காசு கொடுக்குறானோ அவனுக்குத்தான் ஓட்டுப் போடுவாங்க. இல்ல ரெண்டு நல்லவன் போட்டி போட்டா, ஒரு கண்ணுல வெண்ணையையும் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பையும் வெக்கக்கூடாதுன்னு சொல்லி ஊர்லயே கழிச்சிப்போட்ட மகா ‘யோக்கியனுக்கு’த்தான் ஓட்டுப்போடுவாங்க. அந்த யோக்கியரோட 'நல்ல' நேரம் நம்ம பி.கே டீம் முன்மொழிஞ்ச ஆளா இருக்கவும் வாய்ப்புண்டு.

அது மட்டும் நடந்திடுச்சி, "கடந்த தேர்தலில் 'யோக்கியர்' பரமனை வெற்றிபெற வைத்த வியூக வகுப்பாளர்" என்ற அடைமொழியுடன் அடுத்தத் தேர்தலுக்குத் தயாராகிவிடும் நம்ம பி.கே டீம்.

ஏன்னா... ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் இந்த பி.கே டீமுக்கு கல்லா நெறைஞ்சா போதும்; மத்த கவலையில்லையே!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in