
மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் யோகா திருவிழா நடைபெற்றது. மீன் வளத்துறை பணியாளர்கள், மீன் விற்பனையாளர்களுடன் அமர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் யோகாசனம் செய்தார்.
ஜூன் 21-ம் தேதி நாடு முழுவதும் உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதைப் பிரபலப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் யோகா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு பிற துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் 2022-ம் ஆண்டில் யோகா மஹோற்சவத்தை முன்னிட்டு ஜூன் 21-ம் தேதிக்கு 100 நாட்களுக்கு முன்பிருந்தே கவுன்டவுண் நடைமுறை தொடங்கப்பட்டது. ஆக்ரா, டெல்லி, கஜிராகோ, ஒரிசா, பூரி, மும்பை, கோவா, ஹைதராபாத், கொல்கத்தா, கன்னியாகுமரி, ஊட்டி, கொடைக்கானல், அஜந்தா, எல்லோரா, மைசூர், மாமல்லபுரம் என அனைத்து சுற்றுலா பகுதிகளிலும் யோகா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் வளாகத்தில் மத்திய மீன்வளத் துறை சார்பில் யோகாசன விழா இன்று காலை நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் செங்கல்பட்டு கிழக்குக் கடற்கரை சாலைப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், மீன் வியாபாரிகள், மீன்வளத்துறை அலுவலர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். இந்த விழாவைத் தொடங்கி வைத்த மத்திய மீன்வளத்துறை அமைச்சர் எல்.முருகன் மீனவர்களோடு அமர்ந்து சுமார் இரண்டு மணி நேரம் யோகாசனம் செய்தார்.