ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி கொடுத்த 10 பக்க புகார் பட்டியலில் இருப்பது என்ன?

ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி கொடுத்த 10 பக்க புகார் பட்டியலில் இருப்பது என்ன?

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முன்னாள் அமைச்சர்களுடன் இன்று சந்தித்தார். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்பட ஏராளமான மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் கொடுத்த 10 பக்க புகாரின் முக்கிய சாரம்சம், “திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்களில் சட்டம், ஒழுங்கை சரியாக பராமரிக்கத் தவறியதால் தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு மாநில உளவுத்துறையின் தோல்வி. இச்சம்பவத்தில் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்? புற அழுத்தம் இருந்ததா? என்பதை விசாரிக்க குழு அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி, கணியாமூர் பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவத்திலும் மாநில உளவுத்துறையின் தோல்வியே பிரதான காரணம். இதற்கு முன்பு இச்சம்பவத்தில் நிகழ்ந்தது போன்ற வன்முறை தமிழகத்தில் நடந்ததே இல்லை.

போதைப் பழக்கம்

சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் பற்றாக்குறை உள்ளது. சென்னையில் கடந்தவாரம் கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான செல்வி பிரியா சாதாரண மூட்டுவலிக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு தவறான சிகிச்சையால் உயிர் இழந்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் திமுக அரசால் பறிக்கப்படுகிறது.

திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளில் ஃபிளக்ஸ் போர்டு வைப்பதில் நடக்கும் ஊழல்கள் குறித்து விரிவான விசாரணை தேவை. டெண்டர் விடப்படாத அனைத்து டாஸ்மாக், மதுபான விற்பனைக் கடைகளை ஒட்டி சட்டவிரோதமாக பார்கள் நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. இங்கு 24 மணிநேரமும் மது விற்பனை நடக்கிறது. திமுக அரசு ஊழல் தடுப்புத் துறையை பலிவாங்கும் நோக்கத்துடன் பயன்படுத்துகிறது. அரசு கேபிள் டிவி சேவையை முடக்கப் பார்க்கிறது” என 10 பக்கங்களில் இந்த பிரச்சினைகளை எல்லாம் விளக்கி ஆளுநரிடம் கொடுத்துள்ளது அதிமுக.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in