தமிழர்களின் வயிற்றில் அடிக்கிறது திமுக அரசு: சொல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை பிரச்சினையின் போது சிங்கள அரசுடன் கைகுலுக்கி தமிழர்களுக்கு துரோகம் செய்தது போல் காவிரி பிரச்சினையிலும் கர்நாடக அரசுடன் உறவாடி தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதாக திமுக - காங்கிரஸ் மீது முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதற்காக பெங்களூரு சென்றுள்ளார். இந்தநிலையில் தமிழகத்திற்கு வரும் தண்ணீரை மறுக்கும் வகையில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசோடு உறவாடும் வகையில் பெங்களூருக்கு தமிழக முதல்வர் சென்றிருப்பதாக குறிப்பிட்டு பாஜக கருப்பு தினம் அனுசரிப்பதாக கூறி மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து நாகர்கோயிலில் பத்திரிகையாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ’’ரோம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்ததுபோல், தமிழக விவசாயிகளுக்கான காவிரி தண்ணீரை தர மறுக்கும் மேகேதாட்டு அணையை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்போது திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கர்நாடகாவுக்கு சென்று அம்மாநில முதல்வர், அணை கட்டும் திட்டத்திற்கு மூளையாக செயல்படும் டி.கே.சிவகுமார் ஆகியோருடன் கைகுலுக்கி கொண்டு இருக்கிறார்.

சோனியா அளிக்கும் விருந்தில் பங்கேற்க சென்றிருப்பது வேதனையுடன் உள்ள தமிழக விவசாயிகளின் நெஞ்சில் ஈட்டி பாய்வது போல் உள்ளது. மேலும், பெங்களூரு மக்களுக்கான குடிநீர் தேவையை காரணம் கூறி அவர்களுக்கு 10 டிஎம்சி கூட தண்ணீர் தேவைப்படாத நிலையில் 41 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை கட்டப் போவதாக கூறினார்.

ஏற்கெனவே, 9,220 டிஎம்சி தண்ணீர் தர வேண்டியுள்ள நிலையில், புதிய அணை அமைத்தால் தஞ்சை மாவட்டம் பாலைவனமாக மாறும். யானை கட்டிப் போரடித்த தஞ்சை தரணி பாலைவனமாக மாறும். இலங்கைத் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது ராஜபக்சேவுடன் கைகுலுக்கிய திமுக- காங்கிரஸ் கட்சிகள் அப்போது தமிழர்களுக்கு துரோகம் செய்தது போல தற்போது காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்திருக்கிறது.

பெங்களூருவில் நடைபெறுவது கூட்டணிக்கான கை கோர்ப்பு அல்ல. தமிழக விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் கைகோர்ப்பு. இதை கண்டிக்கிறேன். கர்நாடகாவில் புதிய அணை கட்டுவதற்கு அனுமதி தரமாட்டோம் என நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே மத்திய அமைச்சர் ஷெகாவத் உறுதி அளித்துள்ளார். மத்திய அரசு நியாயத்தின் பக்கம் நிற்கிறது.

கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருந்த போது தண்ணீர் தரமாட்டேன் என எடியூரப்பா கூறிய போதிலும் தமிழகத்திற்கு தண்ணீர் தந்ததாகவும் அப்போது காங்கிரஸ் கர்நாடக மக்களின் உணர்வை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தபோது அதையும் சமாளித்து கர்நாடக பாஜக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தந்தது. கர்நாடக அரசு சொல்லிவிட்டு தமிழர்களின் வயிற்றில் அடிப்பதற்கும் தமிழக திமுக அரசு சொல்லாமலேயே தமிழர்களின் வயிற்றில் அடிக்கிறது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in