`தலைவர் பதவிக்கே தகுதியற்றவர்'- கே.எஸ்.அழகிரிக்கு எதிராக தலைமைக்கு சென்ற கடிதம்

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விவசாய காங்கிரஸ் மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன், சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஏற்கெனவே உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் எனக் குரல் எழுப்பியது, ரஜினிகாந்தால் தன் அரசியல் வாழ்வு அஸ்தமனமானது என சூட்டைக் கிளப்பியது என ஆர்.எஸ்.ராஜன் எப்போதுமே சர்ச்சைக்குப் பெயர் போனவர்!

கே.எஸ்.அழகிரியின் மீது என்ன கோபம் என விவசாய காங்கிரஸ் மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜனிடம் காமதேனு இணையத்திற்காகப் பேசினோம். “அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக சொந்தக் கட்சியை சேர்ந்த சிலர் சுயேச்சையாக போட்டியிட்டனர். இவர்களையும், கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸார் சிலரையும் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தற்காலிகமாக கட்சியைவிட்டு நீக்கியது. ஆனால் மாநிலத் தலைமையின் அனுமதி இல்லாமல் நீக்கியது செல்லாது என்று அறிக்கைவிட்டு கட்சி கட்டுப்பாட்டை சீர் குலைக்கும் நபர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செயல்படுகிறார்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக யார் வேலை செய்தாலும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக யார் சுயேச்சையாக போட்டியிட்டாலும் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காது என்று அறிக்கை வாயிலாக கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தான் வகிக்கும் பதவிக்கே தகுதியற்றவர். அதனால்தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இந்த செயல்பாடு குறித்து புகார் மனு அனுப்பியுள்ளேன்’’ என்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட பத்து காங்கிரஸ் கட்சியினர் தற்காலிகமாக நீக்கப்பட்டனர். அதில் 7 பேர் சிட்டிங் கவுன்சிலர்கள் ஆவார்கள். குமரிமேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தார்.

இன்று கே.எஸ்.அழகிரி வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்கள் ஒழுங்குமீறல் நடவடிக்கைக்கு உட்பட்டிருக்கும்பட்சத்தில் காங்கிரஸ் அமைப்பு விதிகளின்படி, சம்மந்தப்பட்டவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டை மாநிலத் தலைமைக்கும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்கும் முறையாக எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணைக்குப் பின்பே, அவர்களின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மாநிலத் தலைமைக்கும், ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கும் தகவல் தெரிவிக்காமல் தாங்களே ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் அது செல்லாது. நடைமுறைக்கு வராது’’எனவும் அறிவித்திருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in