கோத்தபய ராஜபக்சவை எம்.பியாக்குவோம்: பற்ற வைக்கும் இலங்கை அமைச்சர்

இலங்கை திரும்பியுள்ள கோத்தபய ராஜபக்ச
இலங்கை திரும்பியுள்ள கோத்தபய ராஜபக்ச

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை கைது செய்ய யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவோம் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தன. இதனால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு மக்கள் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரே இதற்குக் காரணம் எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை 9-ம் தேதி நடைபெற்ற போராட்டம் மக்கள் புரட்சியாக வெடித்தது. அப்போது அதிபராக இருந்த கோத்தபய உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். அத்துடன் அதிபர் மாளிகைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அத்துடன் அங்கிருந்த பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். இதன் காரணமாக இலங்கை அதிபர் மாளிகையே புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதன் காரணமாக ஜூலை 13-ம் தேதி கோத்தபய ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் சுரங்கப்பாதை வழியாக இலங்கையை விட்டு தப்பியோடினார். இலங்கையில் இந்து மாலத்தீவுக்குச் சென்ற கோத்தபய, அங்கிருந்து சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து சென்றார். சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு கோத்தபய ராஜபக்ச தாய்லாந்தில் இருந்து இன்று அதிகாலை இலங்கையில் பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தடைந்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

அவரை கைது செய்ய வேண்டும் என்று இலங்கையில் குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன. இந்த நிலையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகையில், " முன்னாள் அதிகர் கோத்தபய ராஜபக்ச நாடு திரும்பியமைக்கு எதிராக எவரும் குரல் எழுப்ப முடியாது. அவரைக் கைது செய்யுமாறும் எவரும் அழுத்தமும் கொடுக்கவும் முடியாது. கோத்தபயவை அதிபர் பதவியிலிருந்து விலகி வீடு செல்லுமாறே ஆர்ப்பாட்டக்காரர்கள் அன்று கோரினர். அவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறோ அல்லது வெளிநாட்டில் தங்குமாறோ எவரும் கோரவில்லை.

அவருக்கென சொந்த நாடு இருக்கும்போது அவர் ஏன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்? எங்களது கோரிக்கையின்படி அவர் நாடு திரும்பியுள்ளார்.

அவருக்கு முன்னாள் அதிபருக்குரிய அனைத்துச் சலுகைகளையும் அரசு வழங்குகிறது. அவர் இந்நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியும். போதிய பாதுகாப்பு வசதிகளையும் அவருக்கு அரசு வழங்கும். மீண்டும் அரசியலுக்கு வர அவர் இணக்கம் தெரிவித்தால் அவரை முதலில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக்குவோம். மக்களின் அமோக ஆணை பெற்று அதிபர் பதவி வகித்த கோத்தபய ராஜபக்சவை அரசு என்ற ரீதியில் நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம்" என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு இலங்கை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in