`ஆ.ராசாவுக்கு ஆசை இருக்கும் போது, எனக்கும் ஆசை இருக்கு'- பற்றவைக்கும் நயினார் நாகேந்திரன்

`ஆ.ராசாவுக்கு ஆசை இருக்கும் போது, எனக்கும் ஆசை இருக்கு'- பற்றவைக்கும் நயினார் நாகேந்திரன்

திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக எம்.எல்.ஏவும், சட்டமன்ற பாஜக குழுத்தலைவருமான நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டை இரண்டாக பிரித்துவிடுவோம் என அதிரடியாகப் பேசினார்.

முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரன் பேசுகையில், “ஆ.ராசா தனி நாடு கேட்போம் என தனியாளாகவே நின்று கேட்கிறார். ஆ.ராசாவுக்கு ஒரு ஆசை இருக்கும் போது, எனக்கும் ஒரு ஆசை இல்லாமல் இருக்குமா? நான் கேட்பேன். தமிழ்நாட்டை இரண்டாக பிரியுங்கள். 234 எம்.எல்.ஏ தொகுதியை தலா 117 தொகுதிகளாகப் பிரிப்போம். தென்பகுதியிலும், வடபகுதியிலுமாக நாங்கள் இரு முதலமைச்சர்கள் வந்துவிடுவோம். பிரிக்கமுடியாது என நினைத்துவிடாதீர்கள். அதைச் செய்யக் கூடிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம். நரேந்திர மோடி நினைத்தால் முடியும்” எனப் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போது அதே கருத்தை வலியுறுத்திய நயினார் நாகேந்திரன், நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டாக பிரிக்கத்தான் வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தை எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் பிரித்து தூத்துக்குடியை தனி மாவட்டமாக்கினார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும்போது திருநெல்வேலியில் இருந்து தென்காசியை தனி மாவட்டமாக பிரித்தார். இதையெல்லாம் நிர்வாக வசதிக்காக ஏற்றுக்கொண்டுதானே இருக்கிறோம். ஆ.ராசா தனிநாடு எனச் சொன்ன பின்பு, எனக்கு இப்படியொரு யோசனை வந்தது. இருமாநிலங்களிலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் கூடுதல் நிதியை பெற்றுவரவும் முடியும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in