சிபிஐயிடம் புகார் செய்வோம்: புதுச்சேரி ஆட்சிக்கு எதிராக அஸ்திரம் எடுக்கும் காங்கிரஸ் எம்.பி

வைத்திலிங்கம் எம்.பி
வைத்திலிங்கம் எம்.பி

மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி அளித்தும், அதிக மதுக்கடைகளை திறந்தும் புதுச்சேரி குடிமக்களை, குடிகார மக்களாக்கி மது மயக்கத்திலேயே வைத்து, உடல்நிலை குறைபாட்டுடன் இருக்கச் செய்வதே இந்த அரசின் நோக்கமாக உள்ளது என புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த மக்களவை உறுப்பினர் வெ. வைத்திலிங்கம் கூறியதாவது புதுச்சேரி பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மதுபான தொழிற்சாலை அமைக்க பூர்வாங்க அனுமதி தரப்பட்டுள்ளது. அந்த மதுபான தொழிற்சாலையால் புதுச்சேரியைச் சேர்ந்த எத்தனை இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்? புதுச்சேரி அரசுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுபற்றி அரசு பதில் தரும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் தரவில்லை.

அதிக குடிநீரை எடுத்து பயன்படுத்தக்கூடிய ஆலைக்கு எப்படி அனுமதி தரப்பட்டது? நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீரைத்தான் எடுக்க வேண்டும் என்ற மாசு கட்டுப்பாட்டு உத்தரவையும் முடக்கம் செய்திருப்பது வேதனை அளிக்கிறது. புதுச்சேரியில் ஏற்கெனவே குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதுபோன்ற நிலையில் அதிக நிலத்தடி நீரை எடுக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி தருவது மக்களை வஞ்சிக்கும் செயல். அதோடு மட்டுமின்றி அனுமதி தருவதில் முறைகேடுகளும் நடைபெற்றுள்ளது.

இதை ஆளுங்கட்சி உறுப்பினர்களும், ஆதரவு அளித்துவரும் உறுப்பினர்களும் சட்டசபையில் பதிவு செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டிற்கும் அரசு பதில் சொல்லவில்லை. இந்த குற்றச்சாட்டின் மீது ஆளுநரின் நடவடிக்கை என்ன? இதேபோன்று டெல்லியில் மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதற்கான குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், புதுச்சேரியில் பாஜக குற்றம் சாட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை காண்பிக்கிறது.

புதுச்சேரியில் இயங்கி வந்த ஒரு மதுபான தொழிற்சாலையில் முறைகேடு நடைபெற்றதாக முந்தைய ஆட்சியில் ஆளுநர் நடவடிக்கை எடுத்து மூடினார். அந்த ஆலையை மீண்டும் திறக்க தற்போதைய அரசு அனுமதி அளித்துள்ளது. எந்த அடிப்படையில் முந்தைய ஆளுநரால் மூடப்பட்ட தொழிற்சாலை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது? புதுச்சேரி குடிமக்களை, குடிகார மக்களாக்கி மது மயக்கத்திலேயே வைத்து, உடல்நிலை குறைபாட்டுடன் இருக்கச் செய்வதே இந்த அரசின் நோக்கமாக உள்ளது.

மதுவை அதிகப்படியாக உற்பத்தியும், விற்பனையும் செய்ய அனுமதித்துவிட்டு 100 வயதை தாண்டியவர்களுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்குவது எப்படி சரியாக இருக்கும். மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி புதுச்சேரியில் பெண்களே அதிகம் உள்ளனர். ஆண்களில் பலர் குறைந்த வயதில் உயிரை விடுவதற்கு மதுபழக்கமே காரணமாக உள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு முதல்வர் பதவிக்கு ரங்கசாமி வந்தபோது புதுச்சேரியில் மதுபானக் கடைகளின் எண்ணிக்கை 140 தான். ஆனால், தற்போது 500க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன. இடைப்பட்ட காலங்களில் மற்றவர்கள் முதல்வர்களாக இருந்தபோது எந்த மதுபானக்கடைக்கும் அனுமதி தரவில்லை. உயர்த்தப்பட்ட அனைத்து மதுபான கடைகளும் முதல்வர் ரங்கசாமி அனுமதி அளித்ததுதான்.
மக்களை குடி மயக்கத்திற்கு தள்ளுவதே அதிக மதுபான கடைகளைத் திறப்பதன் நோக்கம்.

புதுச்சேரி மதுபானத் தொழிற்சாலைக்கு முறைகேடாக அனுமதி அளிக்கப்பட்டிருப்பதையும், முறைகேடு நடைபெற்றதால் மூடப்பட்ட மதுபான தொழிற்சாலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்படுவதையும் மக்கள் மன்றத்தில் தெரிவிக்கின்றோம். இதன் மூலம் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கின்றோம். நடவடிக்கை இல்லை என்றால் சிபிஐக்கு எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் தருவோம்" என்று வைத்திலிங்கம் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in