ஒவ்வொரு மாதமும் தேர்தல் நடந்தால் உயராது எரிபொருள் விலை: சுப்ரியா சுலே சுளீர்

ஒவ்வொரு மாதமும் தேர்தல் நடந்தால் உயராது எரிபொருள் விலை: சுப்ரியா சுலே சுளீர்
சுப்ரியா சுலே

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சுப்ரியா சுலே, சமீபகாலமாக இணையத்தில் வெகு பிரபலம். நாடாளுமன்றத்தில் பாஜகவினர் முன்வைக்கும் வாதங்களை, தகுந்த சான்றுகளுடன் முன்வைத்து தகர்க்கும் அவரது பாணிக்கு அலாதியான வரவேற்பு உண்டு. மெல்லிய சிரிப்புடன் அதிராத குரலில் ஆணித்தரமாக அவர் முன்வைக்கும் வாதங்கள் பாஜகவினரைப் பதறச்செய்யும்.

அந்த வகையில், 5 மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பதைத் தனது பாணியில் கிண்டலடித்திருக்கிறார் சுப்ரியா.

இன்று மக்களவையில் உரையாற்றிய அவர், “தேர்தல்கள் மட்டும்தான் எரிபொருள் விலையைத் தடுத்து நிறுத்தும். எனவே, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயராமல் இருக்க ஒவ்வொரு மாதமும் தேர்தல் நடக்கட்டும்” என்று கிண்டலாகக் கூறியிருக்கிறார்.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையில், கடந்த நான்கரை மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவந்த நிலையிலும் எரிபொருள் விலை எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்தது. மார்ச் 10-ல் தேர்தல் முடிவுகள் வெளியாகி, 4 மாநிலங்களில் பாஜக தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட நிலையில், சரியாக இரண்டு வாரங்கள் கழித்து நேற்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 பைசா உயர்ந்தது. எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்திருக்கிறது. இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது.

இதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிவருகின்றன. நேற்று காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தன. இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in