ஆர்.என்.ரவி ராஜினாமா செய்துவிட்டு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசட்டும்!

திமுக கூட்டணி கட்சிகள் ஆவேசம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகிவிட்டு அரசமைப்புச் சட்டத்து எதிராகப் பேசட்டும் என திமுக கூட்டணி கட்சிகள் காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளன.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், ’ஆளுநர் பதவியில் இருந்துகொண்டு பொறுப்பற்ற வகையில் பேசுவதை ஆர்.என்.ரவி தவிர்க்க வேண்டும். ஆளுநர் பதவியிலிருந்து விலகிவிட்டு அரசமைப்புப் சட்டத்திற்கு எதிராகப் பேசட்டும். ஆளுநர் வேறு ஏதோ ஒரு பெரிய பதவியை எதிர்பார்த்து இதுபோன்று பாஜக தலைமையை மகிழ்விக்க பேசிவருகிறார். தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர் முயற்சிக்கிறாரா?’ என திமுக கூட்டணிக் கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

மேலும், ‘பலவாறாகக் கருத்து சொல்லியும் அவர் தன்னை மாற்றிக்கொள்வதாகத் தெரியவில்லை. அவர் எப்போதும்போல் தன் பேச்சைத் தொடர்ந்து கொண்டே வருகிறார். இந்தியாவை மதச்சார்பற்ற நாடு எனச் சொல்லும் நிலையில், எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும் என ஆளுநர் பேசுகிறார். தன்னையே நாடாளுமன்றமாக, உச்ச நீதிமன்ற நீதிபதியாக, குடியரசுத் தலைவராக இன்னும் சொல்லப்போனால் இந்திய நாட்டின் மன்னனாகவே நினைத்துக்கொண்டு பேசத் தொடங்கியுள்ளார் ஆளுநர். மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஆளுநரைக் கண்டிக்கிறோம்’ என அக்கட்சிகள் தெரிவித்திருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in