`எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும்; அதுபற்றி கவலை இல்லை'- நாராயணன் திருப்பதி அதிரடி

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி `எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும்; அதுபற்றி கவலை இல்லை'- நாராயணன் திருப்பதி அதிரடி

"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும். அதுபற்றி கவலை இல்லை" என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அதிரடியாக கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். அதோடு சீமானின் நாம் தமிழர் கட்சியும், டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், தேமுதிகவும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் இதுவரைக்கும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. கூட்டணியில் கட்சித் தலைவர்களை எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வமும் நேரில் சந்தித்து ஆதரவை கோரினர். ஆனால், பாஜக இதுவரை தங்கள் ஆதரவு யாருக்கு என்று அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் நாங்கள் விலகிக் கொள்வோம் என்று ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். ஆனால், இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக பின்வாங்கி வருகிறது. மேலும் ஆதரவை எடப்பாடி பழனிசாமி அணிக்கு அளிப்பதா? ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அளிப்பதா? என்ற குழப்பத்தில் பாஜக இருந்து வருகிறது. அதே நேரத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக தேர்தல் பணி குழுவை அறிவித்தார் அண்ணாமலை. அதோட சரி, மேலும் இடைத்தேர்தல் தொடர்பாக எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.

இந்த நிலையில் சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தெரிகிறது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை இதுவரை எந்த முடிவும் எடுக்கபடவில்லை. ஒரிரு நாட்களில் எங்களது முடிவு தெரிவிக்கப்படும். அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும். அதுபற்றி கவலை இல்லை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in